கவர் ஸ்டோரி

மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?

Tamil Selvi Selvakumar

திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை கழகம் சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. மே 7,8 மற்றும் 9 ஆகிய மூன்று தினங்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்குபெறும் திமுக அமைச்சர்கள் எம்.பிக்கள் எம்.எல்.ஏக்கள் மற்றும் கழக பேச்சாளர்களின் பட்டியலை திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டிருந்தது.

சில நாட்களாகவே மேயர் தேர்வு மற்று மாவட்ட செயலாளர்கள் தேர்வில் மதுரை மாவட்ட திமுகவினருக்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜனுக்கும் மனகசப்புகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும் சில விவகாரங்கள் கட்சிக்குள் பூதாகரமாக வெடித்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் பங்குபெறும் பட்டியலில் மே 7ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாராஜன் உரையாற்றுவார் என முரசொலி நாளேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது மதுரை மாநகர் திமுக சார்பில் தயார் செய்யப்பட்டிருந்த அழைப்பிதழில் மதுரை சிம்மக்கல் பகுதியில் பேராசிரியர் ஜெயரஞ்சன் உரையாற்றுவார் என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் பிடிஆர் பெயர் இடம்பெறாதது மதுரை மாவட்ட திமுகவினர் மட்டுல்லாது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. மதுரை சிம்மக்கல் பகுதியில் இல்லாமல் வேறு எதாவது மாவட்டங்களில் அவர் உரையாற்றுகிறாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.