கவர் ஸ்டோரி

ரூபாய் நோட்டில் மாற்றப்படுகிறதா காந்தியின் உருவப்படம்?!!!

Malaimurasu Seithigal TV

இந்திய ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் லட்சுமி-கணேஷ் இருக்கும் புகைப்படத்தைக் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

எங்கே தொடங்கியது?:

இந்த முழு சர்ச்சையும் ஆம் ஆத்மி அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செய்தியாளர் சந்திப்பில் தொடங்கியது.  கெஜ்ரிவால் இந்திய நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துடன் லட்சுமி-கணேசனின் புகைப்படமும் இருக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அவ்வாறு செய்யும்போது இந்தியப் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும் எனவும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும் எனவும் கெஜ்ரிவால் கோரிக்கைக்கான காரணத்தையும் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவை இதற்கு முன்னுதாரணமும் காட்டியுள்ளார் கெஜ்ரிவால்.

பாஜக-காங்கிரஸ் விமர்சனம்:

கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கைக்குப் பிறகு, ரூபாய் நோட்டுகளைக் குறித்த அரசியல் தொடங்கியது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர் சந்திப்பில், “இந்து தெய்வங்களை அவமதித்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நிச்சயம் தோல்வி.” என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சல்மான் சோஸ் கூறுகையில், ” ரூபாய் நோட்டுகளில் விநாயகர், மாதா லட்சுமியின் பெயர்கள் அல்லது படங்கள் இடம் பெற்றால் செழிப்பு ஏற்படும் என்றால், அதில் அல்லா, ஏசு, குருநானக் ஆகியோரையும் சேர்க்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

சிவாஜி மற்றும் அம்பேத்கார்:

சர்ச்சை தொடங்கி ஒரு நாள் கூட ஆகவில்லை. அதற்குள்ளாக பாஜக தலைவர் நிதிஷ் ரானே  அவரது ட்விட்டர் பக்கத்தில் சத்ரபதி சிவாஜியின் படத்துடன் கூடிய ரூபாய் நோட்டை பதிவிட்டுள்ளார். 

இவரைத் தொடர்ந்து இந்திய ரூபாய் நோட்டுகளில் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் படம் இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மணீஷ் திவாரி கோரிக்கை வைத்துள்ளார். 

-நப்பசலையார்