கவர் ஸ்டோரி

இந்தியாவின் 100வது விமான நிலைய சேவை நிறுத்தப்படுகிறதா!!! நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?!!

Malaimurasu Seithigal TV

சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் அமைந்துள்ள பாக்யோங் விமான நிலையமானத்தில் விமான சேவையை நிறுத்துவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது.  நாட்டின் 100வது விமான நிலையத்தின் விமான சேவை நிறுத்தப்படுவதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம். 

உதான் திட்டம்:

குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு 2017ம் ஆண்டு கொண்டு வந்தது.  குறைந்த கட்டணம், உள்நாட்டு பயணத்திற்கான விமான நிலையங்களை இணைத்தல் உள்ளிட்ட பல திட்டங்கள் உதான் திட்டத்தின் கீழ் வருகின்றன.  

சேவை நிறுத்தம்:

சீன எல்லையை ஒட்டிய சிக்கிமில் உள்ள பாக்யோங் விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட்டின் ஒரே விமானமும் இப்போது நிறுத்தப்பட உள்ளது. அக்டோபர் 30 ஆம் தேதி முதல் தனது விமானங்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ஆணையத்திற்கு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.

சிக்கிமில் இருந்து விமானங்களை இயக்கும் ஒரே நிறுவனம் இதுதான், இந்த மூடல் காரணமாக பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது. 

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்:

பாக்யோங் விமான நிலையம் சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் அமைந்துள்ளது. இது நாட்டின் மிக உயரமான விமான நிலையங்களில் ஒன்றாகும். ஸ்பைஸ்ஜெட் உதான் திட்டத்தின் கீழ் இங்கு விமான சேவையைத் தொடங்கியது. இந்த நிறுவனம் பிராந்திய விமானங்களை இயக்குவதில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும்.  

பிரதமர் நரேந்திர மோடியினால் கொண்டுவரப்பட்ட விமானத் திட்டத்தில் பல நகரங்களுக்கும் விமான சேவையைத் தொடங்கியது ஸ்பைஸ்ஜெட். இருப்பினும், சில நிதி மற்றும் பிற சிக்கல்களால், நிறுவனம் தனது விமானங்களை இயக்குவதில் தற்போது  சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.


பாக்யோன் விமான நிலையம்:

இந்தியா-சீனா எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் உள்ள பாக்யோங் விமான நிலையம் பிரதமர் மோடியால் 2018ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது . இது நாட்டின் 100வது விமான நிலையமாகும்.  இது உதான் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்குவதற்காக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதி மக்களுடனான தொடர்பையும், சுற்றுலாவையும் அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த விமான நிலையம் தொடங்கப்பட்டது.  605 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் 4,500 அடி உயரத்தில் உள்ள பாக்யோங் கிராமத்தில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் உள்ள மலையில் உள்ளது. 

விமான சேவை நிறுத்த காரணம்:

மோசமான வானிலை,  தரையிறங்கும் வசதிகள் இல்லாமை ஆகியவை பாக்யோங் விமான நிலையத்தின் முக்கிய பிரச்சனைகளாக கூறப்படுகின்றன.  இந்தக் காரணங்களால், 2019ஆம் ஆண்டில் இதுபோன்ற காரணங்களால் நிறுத்தப்பட்ட விமான சேவையானது மீண்டும் 2021ல் தொடங்கப்பட்டது.  

தற்போது மீண்டும் நிர்வாகத்தின் நிதி நெருக்கடி காரணமாக விமான சேவை நிறுத்தப்பட போவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  மாநிலத்தின் ஒரே விமான சேவையை தக்கவைத்துக் கொள்ள மத்திய அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

                                                                                                                                     -நப்பசலையார்