கவர் ஸ்டோரி

ஓபிஎஸ் வெளியிடப்போகும் உண்மை என்ன? வெளிவந்தால் எடப்பாடிக்கு அவமானமா?

Tamil Selvi Selvakumar

உண்மைகளையெல்லாம் சொன்னால் எடப்பாடிக்குத்தான் அவமானம் என்று பன்னீர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக பேசியுள்ளார்.

மாறி மாறி தாக்கி கொள்ளும் ஈபிஎஸ் ஓபிஎஸ்:

அதிமுகவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்தே தொடங்கிய உட்கட்சி பூசலானது இன்றளவும் முடிந்த பாடில்லை. அதிமுக தலைமை யாருக்கு என்பதில் ஓபிஎஸ்க்கும், ஈபிஎஸ்க்கும் இடையே மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தாக்கி பேசி வருகின்றனர். 

அதிமுகவில் இணைய 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை:

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அதிமுகவில் இணைய 1 சதவீதம் கூட வாய்ப்பில்லை என்றும், அவர் மறைந்த ஜெயலலிதாவுக்கு எதிராக தேர்தல் வேலைகளை பார்த்தவர் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி விமர்சித்தார்.

பதற்றமாக ஓடி வந்த தங்கமணி, வேலுமணி:

இந்நிலையில், நாமக்கல் கூட்டத்தில் பேசிய எடப்பாடிக்கு பதிலளிக்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாமக்கல் கூட்டத்தில் ஈபிஎஸ் கூறியதை நான் கடுமையாகவும்,  வன்மையாகவும் கண்டிக்கிறேன். அன்றைக்கு இருந்த சூழலில் நான் தர்மயுத்தத்தை தொடங்கினேன். அதுவும் யாருக்காக தொடங்கினேன் என்பதெல்லாம் உங்களுக்கு நன்றாகவே தெரியும். பழனிசாமி முதல்வராக இருந்ததை எதிர்த்துதான் நான் வாக்களித்தேன்”. அப்போது, தங்கமணியும், வேலுமணியும் என்னிடம் வந்து டிடிவி தினகரன் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார், அப்படி கொண்டு வந்தால் திமுக ஓட்டு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஓட்டு, உங்கள் ஓட்டு எல்லாம் சேந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற நிலையில் தான் பதற்றத்தோடு என்னை சந்தித்தார்கள்.

என்னால் தான் ஆட்சி காப்பாற்றப்பட்டது:

அந்த சமயம், சசிகலா அணியிலிருந்து இவர்கள் பிரிந்து விட்டதால் டிடிவி தினகரன் கொண்டு வந்த தீர்மானத்தை அவரோடு சேர்ந்து நான் ஆதரித்திருந்தால்  ஆட்சி கவிழ்ந்திருக்கும். அப்போது, அரசுக்கு நான் தந்த ஆதரவினால் தான் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி 5 வாக்குகளில் காப்பாற்றப்பட்டது. ஆனால், அந்த எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், அவர் என்னை மட்டம் தட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் செயல்பட்டு வருகிறார். என்று குற்றம் சாட்டினார்.

எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்த ஓபிஎஸ்:

தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி எந்த இடத்தில் எல்லாம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டார் என்பதை பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன், அது உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதுவரைக்கும் தேவையில்லாமல் பொய் பேச வேண்டாம். உண்மையெல்லாம் நான் சொன்னால் எடப்பாடி பழனிசாமிக்கு தான் அவமானம்  என்று ஓபிஎஸ் எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

இந்த பின்னணியில், எடப்பாடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஓபிஎஸ் பேசியிருப்பது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ் சொல்லும் ஆதாரங்கள் என்னவாக இருக்கும் என்ற விவாதம் வட்டமடித்து வருகின்றது.