100-வது பிறந்தநாள் கொண்டாடிய முதியவருக்கு குடும்பத்தினர் வைத்த பேனர் 
கவர் ஸ்டோரி

நூறு வயதை தொட்ட தாத்தா... பிரமாண்ட விழா எடுத்த குடும்பத்தினர்

நூறு வயதை தொட்ட முதியவருக்கு குடும்பத்தினர் விழா எடுத்து பிரமாண்ட விருந்தளித்தனர்

சக்தி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என்.கே.ஆர்.காத்த வேளாளர். 99 வயதில் இருந்து நூறாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் இவருக்கு, குடும்பத்தினர் விழா எடுக்க முடிவெடுத்தனர்.

அதன்படி ஜூலை 25-ம் தேதியன்று சதாப்தி மகா பிரத்யுஞ்சை சாந்தி யாகத்துடன் விழா தொடங்கியது.

இதைத் தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினருக்கு பிரமாண்ட அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்று வயிராற சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

3 மகன்கள், 4 மகள்கள் என ஏழு பிள்ளைகள், 11 பேரக்குழந்தைகள், 7 கொள்ளுப் பேரன்கள் என நான்கு தலைமுறைகளைக் கண்டவர் இவர். காத்தவேளாளரின் மனைவி ஆவத்தாளம்மாள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமானதைத் தொடர்ந்து உறவுகளின் அன்பில் திளைத்து வருகிறார்.

இதுவரை மருத்துவமனைக்கே செல்லாமல், மருந்துகளே எடுத்துக் கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அசைவ உணவுகளை தவிர்த்து, காய்கறிகள் சேர்க்கப்பட்ட உணவுகளே பெரிதும் சாப்பிட்டு வந்ததாக கூறியவர், தன்னைப் போல அனைவரும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினார்.

இந்த விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு தென்னம்பிள்ளை மற்றும் மரச்செடிகள் கொடுக்கப்பட்டது.