மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க செல்லும்போது மீன்வரத்து குறைவு, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைக்கு இடையில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்நிலையில், மீனவர்களுக்கு புதிய பிரச்சனையாக இந்திய கடல்சார் மீன்வள மசோதா உருவெடுத்து இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் மழைக்காலக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதில் மிக முக்கிய மசோதாவாக இந்திய கடல்சார் மசோதா பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தை எப்படியாவது மசோதா ஆக்கி விட வேண்டும் என மத்திய அரசு தீவிர முனைப்பில் ஈடுப்பட்டு, அதற்கான முதற்கட்ட ஆலோசனையும் நடத்தியுள்ளது.
இந்த சட்ட மசோதா நடைமுறைக்கு வந்தால், மீன் வளத்தையும், மீனவர் வாழ்வாதாரத்தையும் உயர்த்திட முடியும் மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் மீனவர்களோ இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் கேள்விக் குறியாகிவிடும் என தெரிவிக்கின்றனர்.
அப்படி என்னதான் இந்த மசோதாவில் இருக்கிறது, ஏன் மீனவர்கள் எதிர்க்கிறார்கள்...... தமிழ்நாட்டின் 14 கடலோர மாவட்டங்களில், 608 மீனவ கிராமங்கள் உள்ளன. அதில் சுமார் 45,000-க்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன.
இவைகளை பயன்படுத்தி மீன்வர்கள் தாங்கள் நினைக்கும் போதெல்லாம் மீன்பிடிக்க சென்று வருவார்கள். ஆனால் இந்த சட்டம் பயன்பாட்டுக்கு வந்தால் 1958 ஆம் ஆண்டு வணிக கப்பல் சட்டத்தின்படி, அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட படகுகளில் மட்டுமே மீன் பிடிக்கசெல்ல முடியும்.
மேலும், மீன்பிடிக்க செல்லும் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்திவிட்டு தான் செல்ல வேண்டும். அதிலும் கடல் பகுதியை மூன்று பகுதிகளாக பிரித்து உள்ளனர்.
12 மைல் வரை மட்டுமே மீனவர்கள் சென்று மீன்பிடிக்க முடியும். அதற்கு மேல் சென்று மீன் பிடித்தால் 5 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் மீனவர் சங்க பிரதிநிதி தயாளன்.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் மீனவ மக்களிடம் இருந்து இயந்திர அனுமதி, வள்ள அனுமதி, விசை படகு அனுமதி, வலை அனுமதி, மீனவர் அனுமதி? என வருவாய்க்கு மிஞ்சிய தொகையை கட்டணங்களாகவும், வரியாகவும் வசூலித்து மீனவர்களுக்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தி பாரம்பரிய மீனவ மக்களை, மீன்பிடித் தொழிலையே விட்டுச் செல்லும் அபாயகரமான நிலைக்கு தள்ளப்படும் சூழல் உள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.