கவர் ஸ்டோரி

மாநில அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு...மகிழ்ச்சியில் விவசாயிகள்...!

Tamil Selvi Selvakumar

சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் சாகுபடியை பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடிதம் எழுதிய முதலமைச்சர்:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால் விவசாயிகள் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளைப் பெற இயலாத நிலை உள்ளதால், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்வதற்கான காலவரம்பினை நீட்டிக்க  கோரிக்கை விடுத்ததால், மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலவரம்பினை நீட்டிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார்.

தமிழக அரசின் உழவர் நலத்துறையின் செய்திக்குறிப்பு:

இந்நிலையில் தமிழக அரசின் உழவர் நலத்துறை சார்பில் நேற்றிரவு செய்திக்குறிப்பானது  வெளியிடப்பட்டுள்ளது. அதில், வடகிழக்குப் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட போது, விவசாயிகள் எழுப்பிய கோரிக்கையின் அடிப்படையில், பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

மத்திய அரசு ஒப்புதல்:

இயற்கை இடர்பாடுகள் ஏற்படக்கூடிய காலங்களில் காப்பீடு செய்ய வழிவகை இல்லாதபோதும், விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர் விடுத்த கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு சம்பா, தாளடி, நெல் பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி:

இதனால், பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவை நவம்பர் 19-ம் தேதி மற்றும் 20-ம் தேதிகளில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், சிவகங்கை, திருப்பத்தூர், கரூர், தருமபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், மதுரை, சேலம், திருப்பூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தேனி, திருச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஈரோடு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் ஆகிய 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15-ம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள், நவம்பர் 21-ம் தேதிக்குள் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.