கவர் ஸ்டோரி

ஆம் ஆத்மியை வீழ்த்த பாஜகவின் அரசியல் ஆயுதம்...!!!!!

Malaimurasu Seithigal TV

குஜராத் பல வருடங்களாக பாஜக கோட்டையாக திகழ்ந்து வருகிறது.  குஜராத்தில் பாஜகவை எத்ரிக்கும் சக்தியாக எந்த கட்சியும் வளராதபோது பாஜகவை தோற்கடிப்போம் என்ற முடிவோடு களம் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி.  பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குஜராத்தை அடுத்த இலக்காக கொண்டு களம் இறங்கியுள்ளது ஆம் ஆத்மி.  இதன் தொடர்ச்சியாக டெல்லி முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் தொடர்ச்சியாக குஜராத் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

குஜராத் மாடல் Vs டெல்லி மாடல்:

பாஜகவின் கோட்டியான குஜராத்தை மற்ற கட்சியினர் கைப்பற்ற கூடாது என்பதில் மிக தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது பாஜக.  பாஜக குஜராத் மாடலான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன் வளர்ச்சி திட்டங்கள், இளைஞர்களை தொழிலதிபர்களாக மாற்றுதல், பிற மாநிலங்களுக்கு குஜராத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுதல் போன்ற பல சிறப்பு திட்டங்களை குஜராத்தில் பாஜக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.  

இதற்கு மாற்றாக ஆம் ஆத்மி டெல்லி மாடலை கையிலெடுத்துள்ளது.  இலவச கல்வி, சுகாதாரமான மருத்துவம் போன்ற பல திட்டங்களை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி.  இலவசங்களுக்கு பழக்கப்படாத குஜராத் மாநிலத்தில் இலவசம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.

அச்சப்படுகிறதா பாஜக:

இலவச திட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பாஜகவின் அஸ்வினி உபாதயா.  இது போன்ற இலவச திட்டங்களால் பாஜக தோல்வியை சந்திக்கும் என்ற அச்சத்திலேயே இந்த வழக்கு தொடரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.  அமெரிக்காவில் டெல்லியின் கல்வி மாதிரியை பாராட்டி செய்தி வெளியான அன்றே சிசோடியாவிற்கு சொந்தமான இடங்களுக்கு சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டது.  14 மணிநேர ரெய்டிற்கு பிறகு எதுவும் கிடைக்காத நிலையில் பாஜக சிசோடியவிற்கும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுக்கும் தூது அனுப்பியது.  தனக்கு தானே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதையும் உடைத்தார் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்.

ஆதரவு பெருகும் ஆம் ஆத்மி:

குஜராத்தில் ஆதரவு பெருகி வரும் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் “சிசோடியாவிற்கு எதிராக சிபிஐ ரெய்டு நடத்தப்பட்டதால் வாக்கு ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், ஒருவேளை சிசோடியா கைது செய்யப்பட்டிருந்தால் வாக்கு மதிப்பு 6 சதவீதம் அதிகரித்திருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.

மத அரசியலை தூண்டுகிறதா பாஜக:

குஜராத்தை ஆம் ஆத்மி கைப்பற்றி விடுமா என்ற பயம் பாஜகவிடம் வெளிப்படையாகவே தெரிகிறது.  பல முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து மத கலவரத்தை பாஜக தூண்டுவதாக தெரிகிறது.   குஜராத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெற்று வருவதாகவும் இதே நிலை தொடர்ந்தால் கலவரம் நடக்கும் எனவும் இந்துத்துவா அமைப்புகள் வெளிப்படையாக அறிவித்துள்ளன.  இந்த போராட்டங்களுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாகவும் மக்களிடையே மத உணர்வை தூண்டி வாக்குகளை பெற முயற்சிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.