கவர் ஸ்டோரி

மேற்கு வங்காளத்திலும் ஆபரேஷன் லோட்டஸை கையிலெடுக்கும் பாஜக!!!

Malaimurasu Seithigal TV

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாஜகவின் அமித் மால்வியா.

புகார்களும் கைதும்:

மேற்கு வங்காளத்தில் பிர்பூம் மாவட்டத்தின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அனுப்ரதா மண்டல்.  இவர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர்களில் ஒருவர் என அறியப்படுகிறது.

அனுப்ரதா மண்டல் பிர்பூம் மாவட்டத்தில் பெரும் செல்வாக்கை உடையவர் எனவும் அங்கு திரிணாமூல் காங்கிரஸின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த உதவினார் எனவும் கூறப்படுகிறது.  பிர்பூம் சட்டமன்ற தொதிகளில் 11 இடங்களில் 10 இடங்களை திரிணாமூல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

'கேஷ்டோ டா' என அன்புடன் அழைக்கப்படும் அனுப்ரதா ஒரு தீவிர மம்தா விசுவாசி என கூறுகின்றனர்.  முப்பது வருடங்களாக அரசியலில் இருந்தும் அனுப்ரதா மண்டல் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் வள்ர்ச்சிக்காக உழைப்பவர்களில் அவரும் ஒருவர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனுப்ரதா மண்டல் அவரது ஆதரவின் கீழ் பல குண்டர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும்  பிர்பூம் பகுதியில் மணல் அகழ்வு, கல் குவாரி, கால்நடை கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களிலும் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கால்நடைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அனுப்ரதா மண்டல்.  அவரது கைதுக்கு பின்னர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி எவ்வித கெதிர்ப்பும் தெரிவிக்காமல் தொடர்ந்து அமைதி காத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் மம்தா அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்த பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட போதும் மம்தா எந்த அதிர்ப்பும் ஆதரவும் தெரிவிக்காமல் மௌனமாகவே இருந்தார்.  

பாஜக இணை ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்:

மேற்கு வங்காளத்தில் பாஜகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் செய்தி தொடர்பாளருமான அமித் மால்வியா திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  நாளை உங்களுக்கும் பார்த்தா மற்றும் அனுப்ரதாவின் நிலை தான் ஏற்படும் என்று கூறியுள்ளார்.  அவர்கள் இருவரும் கட்சிக்காக பாடுபட்டதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்றும் ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் மம்தாவிடமிருந்து எவ்வித உதவியும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் நீங்களும் இதுபோல கைவிடப்படுவீர்கள் எனவும் பேசியுள்ளார்.

மே.வங்காளத்தில் ஆபரேஷன் லோட்டஸ்:

அமித் மால்வியா இதுபோல பேசுவது திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை மூளைசலவை செய்வதை போல உள்ளதாக தெரிகிறது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  திரிணாமுல் காங்கிரஸின் எம்.எல்.ஏக்களை மம்தாவுக்கு எதிராக கலகம் செய்ய தூண்டுவதாகவும் அவர்களை பாஜக பக்கம் இழுக்கும் முயற்சி எனவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.  ஆபரேஷன் லோட்டஸ் திட்டம் மம்தாவின் கோட்டையில் கைகூடுமா என்பதை பொறுத்திருந்து தான் கவனிக்க வேண்டும்.