கவர் ஸ்டோரி

"இரும்புக் கோளுக்கு" கடிதம் அனுப்பிய பாஜகவினர்!

Malaimurasu Seithigal TV

பாஜக மாவட்ட தலைவர் ஒருவர் இரும்புக்கோளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சிறப்பிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுடன் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவி ஒருவரின் பெற்றோரான அம்மாசியப்பன் என்பவர், தனது மகள் பணம் இருந்ததால் நீட் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் எனவும் ஆனால் ஏழை மாணவிகள் வெற்றிபெற முடியவில்லை எனவும் கூறி இருந்தார்.

மேலும் ஆளுநரை நோக்கி எப்போது நீட் தேர்விற்கு தடை செய்யும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்குவீர்கள் எனவும் கேள்வி எழுப்பி இருந்தார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவியின் தந்தை ஒருவர் நீட் தேர்விற்கு எதிராக கேள்வி எழுப்பியதும் அதற்கு எப்போதும் நீட் தேர்வை தடை செய்யும் மசோதாவிற்கு பதிலளிக்க மாட்டேன் என அவர் பதிலளித்ததும் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் அம்மாசியப்பன் பணி செய்யும் சேலம் இரும்பாலைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் பாஜக மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தேதி இடப்படாத கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் சேலம் steel plant என குறிப்பிடுவதற்கு பதிலாக சேலம் steel planet எனக் குறிப்பிட்டுள்ளார். இது இரும்பு கோள் எனப் பொருள்படும் வகையில் உள்ளது. இது மட்டுமின்றி இதன் நகலை மத்திய அமைச்சருக்கும் அனுப்பியுள்ள அவர் அவரது பெயர் உட்பட சில இடங்களில் எழுத்துப்பிழையோடு அனுப்பியுள்ளார். இந்த கடிதம் தற்போது அரசியல் நோக்கர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

ஒருபுறம் இந்த கடிதம் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக இருக்கிறது என விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள அதே நேரத்தில், நெட்டிசன்களால் கிண்டலுக்கும் உள்ளாகி இருக்கிறது. தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வரும் "படிங்கடா படிங்கடா" என சொல்லும் காட்சியை உருவகப்படுத்தி இக்கடித்தை நெட்சன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே தற்காலிகமாக என்று பேசுவதற்கு பதிலாக பாஜக பெண் தலைவர் ஒருவர் தாற்காலிகமாக என்று பேசும்போதே பிழையோடு பேசும் வசனங்கள் யுடியூப் சேனல்களில் விமர்சிக்கப்பட்டது.

இவை மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பாஜகவினரை வாட்சப்பில் வரும் செய்திகளை எல்லாம் நம்பி பேசுபவர்கள் என்ற குற்றச்சாட்டு வைத்து கலாய்ப்பவர்களும் ஏராளம். இதனை இப்போது மத்திய அமைச்சர்கள் கூட நம்பி நாடாளுமன்ற விவாதத்தில் ஈடுபடுவதாக முதலமைச்சர் கூட குற்றச்சாட்டை வைத்திருந்தார்.  இப்படிப்பட்ட சூழலில் பாஜக தலைவரின் இந்த கடிதம் மேலும் நெட்டிசன்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

-ச.பிரபாகரன்