கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி பாஜக அவரை சீண்டியுள்ளது.
கொங்கு மண்டலம் முழுவதும் திமுக:
கொங்கு மண்டலம் முழுவதும் தற்போது திமுக வேகமாக வளர்ந்து வருகிறது. அதன்படி, கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலம் முழுக்க திமுக தான் வெற்றி பெற்றது. அதற்கு முக்கிய காரணம் அமைச்சர் செந்தில் பாலாஜி தான். அவருடைய வியூகத்தால் தான், கோயம்புத்தூரில் திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இவரால் தான் சமீபத்தில் 50 ஆயிரம் மாற்று கட்சியினர் கூட திமுகவில் ஐக்கியம் ஆகியுள்ளனர்.
செந்தில் பாலாஜியால் ஆடிப்போன பிற கட்சியினர்:
திமுகவில் செந்தில் பாலாஜி வகுக்கும் வியூகங்களை எதிர்கொள்ள முடியாமல் பாஜக, அதிமுக கட்சிகள் திணறி வருகின்றனர். இதையடுத்தே அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பாஜக தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறது. அந்த வகையில் தான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி மீது நிலக்கரி கொள்முதல் தொடர்பாக தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். அதுமட்டுமல்லாமல், செந்தில் பாலாஜிக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அமலாக்கத்துறை பிசியாக இருக்கிறது, விரைவில் தென்மாநிலங்களுக்கு வரும் என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்தார்.
ஆளுநரிடம் கோரிக்கை:
அதேபோல், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பணமோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவரை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாஜக சார்பில் ஆளுநரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பாஜக:
செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்த பாஜக, இன்று காலையில் கரூரில் அவருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை சாலை சந்திப்புகள், தடுப்புகள், முக்கிய பாலங்களுக்கு கீழ் எல்லாம் பாஜக ஒட்டி உள்ளது. அதில் ”திருடர் குல திலகமே; ஊழலின் மறு உருவமே! அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5000 கோடிக்கு அதிபதி செந்தில்பாலாஜி” என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. செந்தில் பாலாஜியின் சொந்த கோட்டையிலே பாஜக அவரை சீண்டி உள்ளது. இதற்கான தக்க பதிலடி நிச்சயம் தரப்படும் என்று செந்தில் பாலாஜிக்கு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.