கவர் ஸ்டோரி

மதிப்பை உயர்த்திய பாஜக...எம்எல்ஏக்களின் விலை 20 கோடியிலிருந்து 50 கோடி!!! தெலுங்கானா பண்ணை வீட்டில் நடந்தது என்ன?!!

Malaimurasu Seithigal TV

தெலுங்கானாவில் ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியை முறியடித்துள்ளது தெலுங்கானா காவல்துறை.

முதல் குற்றச்சாட்டு:

தெலுங்கானாவில் தற்போது ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  முதலமைச்சராக சந்திரசேகர ராவ் ஆட்சி செய்து வருகிறார்.  அவரது கட்சியின் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிப்பதாக 2019லேயே ராஷ்டிர சமிதி கட்சி குற்றஞ்சாட்டியது.  கோடிகளில் பேரம் பேசியதாகவும் அப்போது கூறப்பட்டது.

தேசிய கட்சி:

சந்திரசேகர ராவ் தற்போது அவரது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்ததோடு கட்சியின் பெயரையும் பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றம் செய்துள்ளார்.  பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் பல தலைவர்களை சந்தித்தும் பேசியும் வருகிறார்.  அதனோடு ஆளும் பாஜகவை தொடர்ச்சியாக கண்டித்தும் விமர்சித்தும் வருகிறார்.

காவல்துறை விசாரணை:

தெலுங்கானா முதலமைச்சர் அவரது கட்சியை தேசிய கட்சியாக அறிவித்துள்ள நிலையில் 4 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சித்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.  பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்ஏக்கள் 4 பேரிடம் 50 கோடி ரூபாய் பணம் வழங்குவதாகவும் அரசு காண்ட்ராக்ட் வழங்குவதாகவும் கூறி கட்சி மாற வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லியை சேர்ந்த ஒருவர் பேரம் பேசியதாக தகவல் கிடைத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

பண்ணை வீட்டில் பேரம்:

ஆசிஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் இந்த பேரம் நடைபெற்றதாகவும் எம்எல்ஏ ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்தபோது சந்தேகதிக்கும் வகையிலான ஒரு நபரை கைது செய்து அவரை விசாரித்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

விசாரணையில் அந்த நபர் அவரை  ஹரியானவை சேர்ந்த சாமியார் என அடையாளப்படுத்துயுள்ளார்.  இந்த பேரம் தந்தூர் தொகுதியின் எம்எல்ஏவின் வீட்டில் நடந்ததாக கூறப்படுகிறது.  இப்போது அந்த  எம்எல்ஏக்கள் முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மறுப்பு தெரிவித்த பாஜக:

சில மாதங்களுக்கு முன்னரே டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 18 பேர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது பண்ணை வீட்டு பேரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  ஆனால் பாஜக தரப்பில் குற்றச்சாட்டை மறுத்து வருவதோடு மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இது போன்ற போலியான நாடகங்களை சந்திரசேகர் ராவ் நடத்துவதாக பாஜக தெரிவித்துள்ளது. 

-நப்பசலையார்