குஜராத் சட்டப்பேரவை தேர்தல்:
குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது. பஞ்சாப்பில் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து குஜராத்தில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றுவோம் என்ற குறிக்கோளோடு பல்வேறு நிலைகளில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டது. மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத்திற்குச் சென்று பல்வேறு "உத்தரவாதங்களை" அளித்து வந்தார்.
தேர்தல் வாக்குறுதிகள்:
இலவச மின்சாரம், மாதம் ரூ.3000 ,வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க 10 லட்சம் அரசு வேலைகள், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 போன்ற உத்தரவாதங்களுடன் அனைவருக்கும் இலவச மற்றும் தரமான மருத்துவம் வழங்கப்படும் என கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார். ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை ஐந்து முறை குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ளார்.
சிபிஐ ரெய்டு:
டெல்லி கல்வி மாதிரியை முன்னோடியாக கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால். அமெரிக்காவில் டெல்லி கல்வி முன்மாதிரியை பாராட்டி செய்தி வெளியான அன்றே டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் வீட்டில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. டெல்லி கலால் கொள்கை அமலாக்கத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த எஃப்ஐஆரில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது. தொடர்ந்து 14 மணிநேரம் சிபிஐ சோதனை நடைபெற்றதைத் தொடர்ந்து டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது செய்யப்படலாம் என்ற நிலையும் உருவானது.
சிபிஐ ரெய்டில் கைப்பற்றப்பட்டவை:
டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டில் எதுவும் கைப்பற்றப்படாததைத் தொடர்ந்து ‘ஆபரேசன் லோட்டஸ்’ டெல்லியில் தொல்வியடைந்ததாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். குஜராத் தேர்தல் பயமே அவர்களை இவ்வாறு செய்ய தூண்டுவதாகவும் டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா தெரிவித்திருந்தார்.
சிசோடியாவுக்கு வந்த அழைப்பு:
சிபிஐ ரெய்டில் எதுவும் கைப்பற்றப்படாததைத் தொடர்ந்து பாஜகவிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்வதாக அவர்கள் கூறியதாகவும் டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாகவும் அவர்களில் ஒருவரும் பாஜகவிற்கு விலை போகவில்லை எனவும் தெரிவித்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்.
நம்பிக்கை வாக்கெடுப்பு:
டெல்லியில் எம்.எல்.ஏக்கள் எவரும் விலை போகவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் 62 எம்.எல்.ஏக்களில் 58 எம்.எல்.ஏக்கள் பங்கேற்று வெற்றியும் பெற்றனர்.
குஜராத்தில் வெற்றி வாய்ப்பும் பாஜக உதவியும்:
டெல்லியில் ஆபரேஷன் லோட்டஸ் பின்னடைவை அடைந்ததாகவும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியிலும் பாஜக தோல்வியுற்றதாகவும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியாவிற்கு எதிராக நடைபெற்ற ரெய்டினால் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கான வாக்கு ஆதரவு 4 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஒருவேளை டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது செய்யப்பட்டிருந்தால் வாக்கு ஆதரவு 6 சதவீதமாக அதிகரித்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க 20 முதல் 50 கோடிகளை செலவழிக்கின்றனர். ஆனால் நாங்கள் பள்ளிக்கூடம் கட்டவும் சுகாதாரமான மருத்துவ சேவைக்காகவும் செலவழிப்பது தவறா என்ற கேள்வியையும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: ஜார்ஜ் சிலுவையை நீக்கிய இந்திய கடற்படை....!!!!முற்றிலும் இந்திய கொடியாக மாறிய வரலாறு!!!!!