பாஜகாவின் கோட்டையை பிடிக்கப்போவது யார்? பரபரக்கும் அரசியல் களம்...!
பாஜக vs காங்கிரஸ்:
பொதுவாக வட மாநிலங்களில் தேர்தல் என்றால் அது பாஜக vs காங்கிரஸ் தான் பிரதான தேசிய கட்சிகளாக இருந்து வரும், ஆனால் தற்போது காங்கிரஸின் நிலை சொல்லி கொள்ளும் அளவிற்கு இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பிம்பத்தை மாற்றிய ஆம் ஆத்மி:
இப்படி இருக்க கூடிய நிலையில், குஜராத் சட்டசபை தேர்தல் கடந்த டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. வட மாநிலங்களில் தேர்தல் என்றாலே எப்போதும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் மோதல் ஏற்படும். ஆனால், இந்த முறை அந்த பிம்பத்தை மாற்றி பாஜகVSகாங்கிரஸ்VSஆம் ஆத்மி என்ற மும்முனை போட்டியை ஆம் ஆத்மி ஏற்படுத்தியுள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் இந்த முறை கடுமையான போட்டி நிலவி வருகிறது.
தொடர் வெற்றியை சந்தித்த ஆம் ஆத்மி:
கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த டெல்லி சட்டசபை தேர்தலில் 67 இடங்களை வென்று ஆட்சியை பிடித்த ஆம் ஆத்மி, கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சிக்கட்டிலை பிடித்தது. இதனால் அதுவரை காங்கிரஸின் கோட்டையாக இருந்த டெல்லியை ஆத் ஆத்மி வென்று அதனை முறியடித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எதிராக களம் இறங்கிய ஆம் ஆத்மி, 117 தொகுதிகளில் 92 இடங்களை வென்று ஆட்சியில் இருந்த காங்கிரஸை தோற்கடித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது. இப்படி தொடர் வெற்றியை சந்தித்து வந்த ஆம் ஆத்மி கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் 250 வார்டுகளில் 136 வார்டுகளை வென்று டெல்லியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த பாஜகவை தோற்க்கடித்து அமோக வெற்றி பெற்றது.
பாஜகவின் கோட்டை:
இதையடுத்து பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலிலும் தைரியமாக களம் இறங்கியது. குஜராத் என்றாலே அது பாஜகவின் கோட்டை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். ஏனென்றால், கடந்த 27 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி தான் கொடிக்கட்டி பறந்து வருகிறது. இந்நிலையில் பாஜகவிற்கு இணையாக தேர்தல் பிரச்சாரத்தையும் மிக தீவிரமாக ஆம் ஆத்மி ஈடுபட்டது. இதனால் 27 ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி வென்று ஆட்சியை பிடிக்குமா? என்ற பிம்பம் அரசியல் பார்வையாளர்களிடையே நிலவி வந்தது. அதே சமயம் வீழ்ந்த காங்கிரஸும் மீண்டும் எழுமா? என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் நிலவி வந்தது. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கை இருக்க போகிறது.
குஜராத் தேர்தல்:
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை முதலே எண்ணப்பட்டு வருகிறது. காலை முதலே எண்ணப்பட்டு வரும் வாக்குப்பதிவுகளில் பாஜக தான் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வரை 182 தொகுதிகளில் 154 இடங்களை வென்று தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் இதுவரை 18 இடங்களை மட்டுமே வென்று உள்ளது, அதேபோன்று ஆம் ஆத்மி 7 இடங்களையும், மற்றவை 3 இடங்களையும் பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக தான் முன்னிலையில் உள்ளதால் இந்த முறையும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அரசியல் களத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.