கவர் ஸ்டோரி

"ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”

Malaimurasu Seithigal TV

சூரியன் அஸ்தமிக்காத பரந்த பேரரசு, அதன் எல்லைகள் இன்னும் கண்டறியப்படவில்லை."  வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயன் ஒருங்கிணைக்கப்படாத இந்தியாவில் அவனது பேரரசை உருவாக்கினான்.  பிளவுப்பட்டு கிடந்த அரசர்களை அவனது நலனுக்கு பயன்படுத்திக் கொண்டான்.  பிளவுபட்டு கிடந்த பகுதியில் மேலும் குழப்பங்களை ஏற்படுத்தினான்.

பிளவுப்பட்ட அரசுகள்:

ஒருங்கிணைக்கப்படாத நிலப்பகுதிகளை பல ஆட்சியாளர்கள் ஆண்டு கொண்டிருந்தனர்.  அவர்களின் அரசை பேரரசாக மாற்றும் அவர்களின் கனவு மட்டும் அவர்களிடையே காணப்பட்ட ஒரே ஒற்றுமை.  மண்ணின் மீது கொண்ட ஆசையால் தொடர்ந்து போரிட்டு கொண்டே இருந்தனர் ஆட்சியாளர்கள்.   1600 முதல் 1700 காலக்கட்டங்களில் மிக வலுவான பேரரசுகளாக இருந்தவை மொகலாய பேரரசும் மராத்திய பேரரசு.  பல ஆட்சியாளர்கள் சிறிய நிலப்பகுதிகளை ஆண்டு கொண்டிருந்தனர்.  தென்னிந்தியாவில் நாயக்கர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.  ஒருங்கிணைக்கப்படாத அனைத்து பகுதிகளையும் ஒருங்கிணைத்து அவர்களின் ஆட்சியின் கொண்டு வருவதையே ஒரே நோக்கமாக கொண்டு அனைத்து அரசர்களும் தொடர்ந்து அவர்களுக்குள் போரிடுவதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தினர்.

கவனிக்கப்படாத வணிகர்கள்:

அரசர்கள் போரில் முழு கவனத்தையும் செலுத்திய அதே நேரத்தில் வசீகரமான ஒப்பந்தங்கள் மூலமாக ஒவ்வொரு பகுதியாக ஆங்கிலேய வணிகர்கள் கைப்பற்றி வந்தனர்.  முழு பகுதியையும் கைப்பற்றுவதற்கான சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தனர் என்றே கூறலாம்.  மண உறவுகள் மூலமாகவும்  குத்தகை மூலமாகவும் விலைக்கு வாங்குவதன் மூலமும் பல பகுதிகளை பெற்றுக் கொண்டனர்.  சில சமயங்களில் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டனர் வணிகம் புரிய வந்த ஆங்கிலேயர்கள்.

ஒற்றுமையின்மையால் அழிந்த பேரரசுகள்:

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு மகிழ்ச்சி” என்பதை போல அரசர்களுக்கிடையே காணப்பட்ட பிளவுகளை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் ஆட்சியை அமல்படுத்தினர்.  ஏதேனும் ஒரு பிரிவினருக்கும் ஆதரவு காட்டி மற்றொரு பிரிவை தோற்கடித்தனர்.  பின்னர் ஆதரவு அளித்த பகுதியின் ஆட்சியாளருக்கு கட்டாய ஓய்வு அளித்து ஆட்சியை இவர்கள் செய்தனர்.  ஆங்கிலேயனின் பிரித்தாளும் கொள்கையை அரசர்கள் உணர்வதற்குள் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்தனர் ஆங்கிலேய வணிகர்கள்.  அரசர்களுள் பலர் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது நாடு கடத்தப்பட்டிருந்தனர் அல்லது ஓய்வளிக்கப்பட்டிருந்தனர்.

ஒற்றுமையே வலிமை என்பதை மிக தாமதமாகவே உணர்ந்தனர் அரசர்கள்.  அவர்கள் ஒன்றிணைந்து தாக்க முற்பட்ட போது ராணுவத்திலும் ஆயுத்ததிலும் அரசர்களை விட பன்மடங்கு வலிமை பெற்றவர்களாக வலுப்பெற்று ஒரு பேரரசையே உருவாக்கியிருந்தனர்.  தெற்கு பகுதிகளிலும் அனைத்து பகுதியினரும் இணைந்து தொடக்க காலத்தில் ஆங்கிலேயர்களை விரட்ட முயன்றதையும் ”ஒரு நரியைப் போல் நூறு ஆண்டுகள் வாழ்வதை விட, சிங்கம் போல் ஒரு நாள் வாழ்வது சிறப்பானது”  என முழங்கிய அரசர்களின் போராட்டங்களையும்  அடுத்த கட்டுரையில் விரிவாக காணலாம்.