கவர் ஸ்டோரி

கோவை வழக்கில் திடீர் திருப்பம்...6 வது நபர் அதிரடி கைது...நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

Tamil Selvi Selvakumar

கோவை கார் வெடித்து விபத்துகுள்ளான வழக்கில் 6வதாக கைதான அப்சர்கானை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை சம்பவம்:

கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது கார் சிலிண்டர் வெடிவிபத்து சம்பவம். இந்த நிகழ்வில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்ததையடுத்து, இது தொடர்பாக ஜமேஷா முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, சனிக்கிழமை இரவு விபத்துகுள்ளான காரில் ஜமேஷா முபின் உள்பட ஐவர் இணைந்து எதையோ தூக்கி செல்வது போன்ற  சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அந்த சிசிடிவியில் இருந்த கூட்டாளிகள் ஐந்து பேரையும் உபா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவர்களை மூன்று நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

என்.ஐ.ஏ விசாரணைக்கு மாற்றிய முதலமைச்சர்:

இதனிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கானது என்.ஐ.ஏ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை ஏற்று உள்துறை செயலகம் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.

6வது நபர் கைது:

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆறாவதாக ஒரு நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ஜமேஷா முபினின் உறவினர் தான் அப்சர் கான் என்பது தெரியவந்தது. அப்சர் கானை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜார்படுத்தினர், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்தோஷ், வரும் நவம்பர் 10 ஆம் தேதி வரை 14 நாட்கள் அப்சர் கானை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அப்சர் கானை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்று விசாரணையை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, இந்த வழக்கில் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தற்போது திடீர் திருப்பமாக 6வது நபராக அப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த வழக்கில் அடுத்தடுத்து யார் யார் கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு அப்பகுதியில் நிலவி வருகிறது.