கவர் ஸ்டோரி

ஆந்திரா போலீசாரின் மிருகத்தனமான தாக்குதலில் சிக்கி பாதிக்கப்பட்ட தமிழ் நாட்டு பழங்குடியினர்!!

Malaimurasu Seithigal TV

விசாரணை பட பாணியில், தமிழ் நாட்டில் இருந்து வேலைக்காக ஆந்திரா சென்றவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை என்ற பெயரில், குடும்பத்துடன் அழைத்துச் சென்று ஆந்திரா போலீசார் சித்ரவதை செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே உள்ள புளியண்டபட்டி கிராமத்தில் பழங்குடியினத்தை சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த நகை கடையில் கொள்ளை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 

இதனால், அங்கு வேலைபார்த்த ஐயப்பனை சந்தேகத்தின் பேரில், சித்தூர் போலீசார் விசாரணைக்காக கடந்த 11ம் தேதி அழைத்து சென்றுள்ளனர். கூடவே, அவரது தாயார் கண்ணம்மாள், உறவினர் அருணா மற்றும் 7 வயது குழந்தை என நான்கு பேரையும் அழைத்துச்சென்றுள்ளனர். அப்பொழுது, காவலர்கள் சீருடையில் இல்லாமல், சிவில் உடையில் வந்துள்ளனர்.

இந்நிலையில், ஐயப்பனின் சகோதரி என்ன செய்வதென்று அறியாமல், இணையத்தில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார். சத்யா புகார் அளித்ததை அறிந்த ஆந்திரா போலீசார், அடுத்த நாள், ஜூன் 12ம் தேதி இரவு 15க்கும் மேற்பட்ட போலீசாருடன் புளியாண்டபட்டி கிராமத்திற்கு சென்று வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்திவிட்டு, அதன் ஹார்டு டிஸ்கை கழற்றி எடுத்துக்கொண்டு, பின்னர், சத்யா, ரமேஷ், ரேணுகா, அருணா, பூமதி மற்றும் ராகுல் என்ற 6 வயது சிறுவன் உட்பட ஆறு பேரை அழைத்துச் சென்றுள்ளனர். 

அவர்களை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்களை கடுமையாக தாக்கியதோடு, அவர்களுள், இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து குற்றசாட்டு எழுந்ததையடுத்து, தமிழ்நாடு குறவர் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் நடந்த இந்த அநியாய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களை மீட்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் வைக்கப்பட்டிருந்த அவர்களில் 8 பேரை கம்யூனிஸ்டு கட்சியினரும், குறவன் சங்கத்தினரும் புகாரின் பேரில் மீட்டனர். அதிலும் ஐயப்பன் மற்றும் அவரது மனைவி பூமி ஆகிய இருவரையும் காவலில் வைத்துவிட்டு 8 பேரை மட்டும் விடுத்துள்ளனர். விடுவிக்கப்பட்ட 8 பேரில், 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோர், மத்தூர் காவல் நிலையத்தில், தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவர், நாங்கள் உங்க மக்கள் தானே?, உங்கள் அனுமதி இல்லாமல் எங்களை எப்படி மற்றொரு மாநில காவல்துறை அழைத்துச் செல்ல அனுமதித்தீர்கள்? இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்? என ஆதங்கத்துடன் காவல்துறையினரிடம் கேட்டுள்ளார். அதற்கு காவலர்கள் பதிலளிக்க முடியாமல் நின்றுள்ளார்கள். பின்னர் அவர்கள் கொடுத்த புகாரின் பெயரில், தற்போது மத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து, ஆந்திர மாநில அரசு  முறையான விசாரணை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டதை தொடர்ந்து, ஆந்திர மாநில சித்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எல்.லூசூரி தலைமையில் பத்திருக்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார், போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் சென்று, அவர்களின் சாதி சான்றுகளை ஆய்வு செய்துவிட்டு, புளியாண்டப்பட்டி சென்று 8 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். 
 
ஆந்திரா போலீசாரின் இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு, விசிக தலைவர் திருமாவளன், கண்டனம் தெரிவித்துள்ளார். விடுவிக்கப்படாமல் இருக்கும் அவ்விருவரின் நிலையை கண்டறிய வேண்டும் எனவும், பெண்கள், குழந்தைகள் என அவர்கள் மேல் பொய் வழக்குகள் போடப்பட்டிருந்தால், அவற்றை விளக்கவும், பாதிக்கப்பட்டோருக்கு நிதி கிடைக்க வேண்டுமென தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது தொடர்பாக வருகின்ற 26ம் தேதி கண்டன ஆர்பாட்டம் நடக்குமென்றும் தெரிவித்துள்ளார். 

இதுபோலவே, மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூரை சேர்ந்த 32 வயது இளைஞரை, கர்நாடக போலீஸ், விசாரணை என்ற பெயரில் 15 நாட்கள் வைத்து அடித்து துன்புறுத்தியதில், மனம் உடைந்த அந்த இளைஞர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

தமிழகத்தில் தான் மக்கள் இது போன்ற சூழ்நிலையில் எப்பொழுதாவது சிக்கி சீரழிக்கப்படுகிறார்கள் என்றால், தமிழ் நாட்டை சேர்ந்தவர்களை மற்றொரு மாநில காவல் துறை துன்புறுத்துவது வெட்கக்கேடாக இருக்கிறது. நடக்கும் இது போன்ற சம்பவங்களை தமிழ் நாடு அரசு அறியாமல் இருக்கின்றதா, இல்லை கண்டும் காணாமல் இருக்கின்றதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.