கவர் ஸ்டோரி

காலியாகும் டிடிவி கூடாரம்... அமமுகவின் அஸ்தமனத்திற்கு காரணம் சசிகலாவா?

சசிகலாவை டிடிவி சந்தித்தால் சரி..! தொண்டர்கள் சந்தித்தால் தவறா?

Malaimurasu Seithigal TV

அமமுக கட்சியில் இருந்து நாங்கள் ஒட்டுமொத்தமாக விலகுகிறோம் என்று கூறி அமமுக தொண்டர்கள் தினகரனுக்கு ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள அரசியலை ஆராய்ந்து பார்க்கும்போது சசிகலா ஆதரவு நிர்வாகிகள் சிலரால் அமமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இதனால் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கொஞ்சம் அப்செட்டில் இருந்து வருகிறாராம். திருவள்ளுவர் மாவட்டம் பூந்தமல்லி நகர அமமுக செயலாளராக இருந்தவர் கந்தன். இவர் அந்தப் பகுதியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பரிச்சயமானவர். அவர் அவ்வப்போது சசிகலாவை சந்தித்து வருவதாகவும், சசிகலாவின் நிகழ்ச்சிகளில் இவருடைய ஆதரவாளர்களுடன் கலந்து கொள்வதாகவும் அவரைப் பற்றி  சில வதந்திகளும் பரவி வந்தது. அதைத் தெரிந்துகொண்ட தினகரன் இவரின் மீது கோபத்தில் இருந்துள்ளார்.

சசிகலாவின் நிகழ்ச்சிகளுக்கு தலைமையின் உத்தரவு இல்லாமல் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு தினகரன் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதனை மீறி செயல்படுபவர்களை கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டார். தினகரனின் பேச்சை மீறி செயல்பட்ட கந்தனை இரண்டு நாட்களுக்கு முன்பு கட்சியில் இருந்து தினகரன் நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் கடுப்பான கந்தனின் ஆதரவாளர்களும், பூந்தமல்லி அமமுக நிர்வாகிகளும் தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். கந்தனை கட்சியிலிருந்து நீக்கியதை திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் கட்சியில் முக்கியமான ஒரு நிர்வாகி, அவரை எப்படி நீங்கள் நீக்கலாம் என்றும் பலர் கடுப்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தினகரன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அசால்டாக இருந்துள்ளார். இதைக் கண்டு இன்னும் கடுப்பான தொண்டர்கள் நேற்று சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டுக்கு  பூந்தமல்லி அமமுக தொண்டர்கள் சாரை சாரையாக தினகரனை சந்திக்க முயற்சி செய்துள்ளனர். 

இந்த நிலையில் தொண்டர்களுக்கு தினகரனை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. தொண்டர்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்புமாறு அந்த வீட்டில் இருந்தவர்கள் கூறியதால் அமமுக நிர்வாகிகள் தினகரன் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். தினகரனின் இந்த நடவடிக்கையை கண்டு ஆத்திரத்தில், அமமுக நிர்வாகிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்து அதனை நேரடியாக தினகரனுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவுக்குள் பல்வேறு சலசலப்புகள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், தனது பலத்தைக் காட்டவும் அதிமுகவை மீட்கவும் பிளான் போட்ட சசிகலா,  டிசம்பர் 4ஆம் தேதி மாலையில் டிடிவி தினகரனை தி நகர் அபிபுல்லா வீட்டுக்கு அழைத்துப் பேசினார். தினகரன், சசிகலா மீது என்னதான் அதிருப்தியில் இருந்தாலும், சசிகலா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டார் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் சமயத்தில் அமமுக தொண்டர்கள் சசிகலாவை சந்தித்ததற்கு ஏன் தினகரன் அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என மக்கள் மத்தியில் ஒரு கேள்வியும் மேலோங்கி உள்ளது. சசிகலாவால் அமமுகவில் ஒரு பூகம்பமே வெடித்து விட்டது என்று அமமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.