அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு நீதிபதிகளின் விருப்பத்தின் படியா? அல்லது சட்டத்தின் படியா? என்ற கேள்வி வட்டமடித்து வருகிறது...
அதிமுகவின் உட்கட்சி பூசல்:
அதிமுகவில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி முதலே உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. அணையாத நெருப்பாய் எரிந்துக்கொண்டிருக்கும் இந்த ஒற்றைத்தலைமை பிரச்சனையில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் சட்டபோரட்டத்தை கையிலெடுத்தனர். ஜூன் 22 ஆம் தேதி எடுத்த இந்த சட்ட போராட்டமானது இன்று வரை ஓய்ந்த பாடில்லை. மாறி மாறி இருவரும் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
ஜூன் 22:
கடந்த ஜூன் 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தான் முதன் முதலில் ஒற்றை தலைமை கோஷம் எழுந்தது. இந்த கோஷத்தை தொடர்ந்து, ஈபிஎஸ் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தினார். ஆனால், அதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து ஜுன் 23 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தபோவதாகவும், அதில் ஒற்றைத்தலைமை குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற போவதாகவும் ஈபிஎஸ் கூறியிருந்தார். இதனை எதிர்த்து பொதுக்குழு கூட்டத்துக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.
ஓபிஎஸ் மேல்முறையீடு:
தனிநீதிபதி தீர்ப்பை எதிர்த்து, தலைமை நீதிபதி அமர்விடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி அளித்ததோடு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என ஆணையிட்டனர்.
ஜூலை 11:
ஜுன் 23 பொதுக்குழுவை தொடர்ந்து, ஜூலை 11 ஆம் தேதி நடக்கவிருந்த பொதுக்குழுவுக்கு தடைக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கிருஷ்ணன் ராமசாமி ஜூலை 11 ஆம் தேதி காலை 9 மணியளவில் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்திய ஈபிஎஸ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் வழக்கு:
கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை உயர்நீதிமன்றமே தீர்ப்பளிக்கும் என்று கூறிவிட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வு விசாரணை மேற்கொண்டது.
ஆகஸ்ட் 17 தீர்ப்பு:
ஜூலை 11 ஆம் தேதி ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழுவை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லாது என்றும், கட்சி விதிப்படி பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் சேர்ந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பின் மூலம் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஈபிஎஸ்சின் பதவியும் செல்லாது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 18:
கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
செப்டம்பர் 2:
இந்த வழக்கின் தீர்ப்பை இரு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. ஆகஸ்ட் 17ஆம் தேதி தனிநீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பு ரத்து செய்வதாகவும், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பின் படி, ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தெடுக்கப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பை அடுத்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எத்தனை முறை நீதிமன்றம்:
இப்படி ஜூன் 22 ஆம் தேதி ஆரம்பித்த ஈபிஎஸ் ஓபிஎஸ்சின் சட்டபோராட்டம், இன்று வரைக்கும் தொடர்ந்து வருகிறது. எத்தனை முறை இருவரும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று மாறி மாறி நீதிமன்றத்தை வலம் வருகிறார்கள் என்பது கைவிட்டு எண்ணி பார்க்கும் நிலையில் உள்ளது. இது இன்றுடன் முடிவடையாது என்றும், இன்னும் இவர்களின் சட்ட போராட்டமானது தொடரும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகிறார்கள்....
நீதிபதியின் விருப்பத்தின் படியா..? சட்டத்தின்படியா?:
அதேபோன்று, நீதிபதிகள் ஒரு முறை ஓபிஎஸ்க்கு ஆதரவாகவும், அடுத்த முறை ஈபிஎஸ்க்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கி வருகின்றனர். இதே நிலை தொடர்வதால், நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பானது அவர்கள் விருப்பத்தின் படியா? அல்லது சட்டத்தின் படியா? என்ற கேள்வி எழும்புவதாக அரசியல் வல்லுநர்கள் கூறி வருகின்றனர்...