கவர் ஸ்டோரி

ஒளிக் கொடுத்தவருக்காக இருளில் மூழ்கிய நகரம்.. பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சிறுவன் விஞ்ஞானி ஆன கதை!

1882ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  முதல் முறையாக நியூயார்க் நகரமே மின்சார விளக்குகளால் பிரகாசமாகியது.

Malaimurasu Seithigal TV

யாரும் பிறக்கும் போதே மேதையாக பிறப்பதில்லை

ஒரு மனிதை பார்த்து யாரேனும் மேதை என்று அழைப்பதனால் அவருக்கு மேதைமை இயற்கையாகவே அமைந்துவிட்டது என்று சொல்ல முடியாது. அப்படி அமைவது ஒரு சதவிகிதம் தான்; மீதி 99% சதவிகிதம் கடின உழைப்பின் மூலமே மேதையாக அறியப்படுகிறார். எனவே, "கடின உழைப்பிற்கு மாற்று வேறெதுவும் இல்லை". தனது சொற்படியே வாழ் நாள் முழுதும் தினமும் பதினெட்டு மணி நேரம் உழைத்தவர் தான் "தாமஸ் ஆல்வா எடிசன்"

பள்ளியிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட தாமஸ் ஆல்வா 

தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவில் ஓஹியோ என்ற மாநிலத்தில் மிலன் என்கிற நகரத்தில் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி சாமுவேல் எடிசன் - நான்சி என்கிற தம்பதியருக்கு மகனாக பிறந்தார். எட்டு வயதில் கல்வி கற்கப் பள்ளியில் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், சில மாதங்களிலே படிப்பு ஏறவில்லையென பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் மகனின் எதிர்காலத்தை எண்ணி கவலைக் கொண்ட தாயார் நான்சி வீட்டிலிருந்தே தன் மகனுக்கு கல்வி புகட்டுகிறார்.

தன்னம்பிக்கை கொடுத்த தாய்; விஞ்ஞானி ஆகிய மகன் 

கல்வியோடு சேர்த்து தன் மகனுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் யாரை கண்டும், எதை கண்டும்  அச்சப்பட கூடாது, தோல்வியை கண்டு அஞ்ச கூடாது,  அதிலிருந்து தான் பாடம் கற்று கொள்ள முடியும். எந்த ஒரு செயலையும் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும், கற்றுக் கொள்வதை எக்காலத்திலும் நிறுத்திக்கொள்ள கூடாது, தொடர்ந்து உன்னை மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்ற அறிவுரைகளையும் வழங்கியுள்ளார். அதனால் தான் என்னவோ பள்ளிக்கூடமே காணாத அந்த சிறுவன் மனித இனம் காணாத மாபெரும் விஞ்ஞானி ஆனார்.

சிறு வயதிலேயே அறிவியல் ஆர்வம் கொண்ட தாமஸ்

தாமஸ் ஆல்வா எடிசன் பத்து வயதிலேயே தனது சோதனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்காக பட்டறை (workshop) ஒன்றை அமைத்துக் கொண்டார். தனது பன்னிரண்டாவது வயதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று இரயிலில் செய்தித்தாள்கள், காய்கறிகள், பழங்கள் என விற்று; தனக்கு கிடைத்த சிறு லாபத்தில் அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குகிறார்.

1859இல் இரயிலில் பத்திரிக்கை அச்சடித்து பயணிகளுக்கு விற்பனை செய்யும் வாய்ப்பு ஒன்று கிடைத்தபோது, இரயிலின் கடைசி பெட்டியில் அச்சு இயந்திரம் ஒன்றை நிறுவி தினமும் சுடச்சுட செய்திகளைச் அச்சடித்து பயணிகளுக்கு வழங்கினார். இதன் மூலம் அவருக்குக் கணிசமான வருவாய் கிடைத்தது ‌.


1861-ல் உள்நாட்டுப் போர் மூண்டபோது மக்கள் போர் செய்திகளை அறிவதில் ஆர்வம் கொண்டனர். எடிசன் தானே செய்தித்தாளை அச்சடித்து விற்பனை செய்தார். அச்சிடுவது, விற்பது எல்லாமே ரயிலில் தான்; தம்முடைய செய்தித்தாளுக்கு அவரே நிருபராகவும், செய்திகளை அச்சிடுபவராகவும், விற்பனையாளராகவும் செயல்பட்டார்.

காது கேட்கும் திறனை இழந்த எடிசன்

செய்தித்தாள்கள் அச்சிட்ட அதே பெட்டியில் இன்னொரு புறத்தில் ஆராய்ச்சி கூடம் ஒன்றை நிறுவினார். பத்திரிக்கை வேலைகள் இல்லாத சமயத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார் எடிசன். ஒரு முறை வேதிப்பொருளொன்று கீழே கொட்டியதால் அந்த ரயில் பெட்டியில் தீப்பிடித்தது. அப்போது ரயிலின் நடத்துநர் கோபப்பட்டு எடிசனை அறைந்ததால் அவருக்குக் காது கேட்கும் திறன் குறைந்தது.

ஒரு சிலர் சிறுவயதில் ஏற்பட்ட ஒரு நோயினால் எடிசனுக்கு காதுகள் கேட்காமல் போனது என்றும் சொல்கின்றனர். ஆனால் எடிசன் அதை பொருட்படுத்தவில்லை; இந்த குறைபாட்டினால் சற்றும் மனம் தளரவுமில்லை.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது - குறள் 

ஒரு முறை ரயிலில் அடிபட இருந்த ஸ்டேஷன் மாஸ்டரின்  மூன்று வயதுக் குழந்தையை காப்பாற்றிய எடிசனுக்கு; அக்குழந்தையின் தந்தை வார்த்தைகளால் மட்டும் நன்றி சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பொழுது புழக்கத்திலிருந்த தந்தி இயந்திரத்தை, எப்படி இயக்குவது என்று சொல்லி கொடுக்கிறார்.

இதனை கற்றதனால் தந்தி அலுவலகமொன்றில் வேலை கிடைக்கிறது. பிறகு தந்தி இயந்திரத்தின் செயல்பாட்டினை எப்படி செம்மைப்படுத்துவது என ஆராய்ந்து அதில் வெற்றியும் காண்கிறார்.

ஒலி - ஒளி சாதனங்களின் தந்தை 

இவர் படைத்த புதிய இயந்திரத்தினால் 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது. பின்னர் தந்தி அலுவலகத்தை விட்டு வெளியேறி முழு நேர அறிவியல் கண்டுபிடிப்பாளராக மாறுகிறார். தனது கண்டுபிடிப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில், 1870ல் முதல் ஆராய்ச்சி மையத்தை நியூஜெர்ஸி மாகாணம் நெவார்க் நகரில் நிறுவுகிறார்‌ எடிசன். அவரது கண்டுபிடிப்புகள் ஏராளமாக இருந்தாலும் கூட இன்றைக்கும் நாம் பெருமளவில் பயன்படுத்துகின்ற ஒலி - ஒளி சாதனங்களுக்கு எல்லாம் எடிசன் தான் தந்தை.

தனது கண்டுபிடுப்புகளுக்கு காப்புரிமை பெற்ற விஞ்ஞானி

உலகில் எத்தனையோ அறிவியலாளர்கள் இம்மனித சமுதாயத்திற்குத் பல கண்டுபிடிப்புகளை கொடுத்திருந்தாலும் அவர்களில் முதன்மையானவர் தாமஸ் ஆல்வா எடிசன். அறிஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் செல்வத்தை ஈட்டித் தரும் என்கின்ற வியாபார தன்மையை முதன்முதலாக உணர்த்தியவர் எடிசன்‌ தான்.

அதற்கு காரணம் இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி; அதற்குக் காப்புரிமையும் பெற்றிருந்தார். அவர் தனது பெயரில் 1,093 காப்புரிமைகளை வைத்திருந்தார்.

உலகிற்கு ஒளி கொடுத்த எடிசன்

மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிலிருந்தாலும் அதனைக் கொண்டு ஒளியூட்டக்கூடிய வழிமுறைகளுக்கு அறிவியல் உலகம் பெரும் முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில் எடிசனின் பங்கு ஈடு இணையற்றது. வெற்றிட கண்ணாடி குமிழிக்குள் ஒளிரும் தன்மைகள் கூடிய இழைகள் வழியாக மின்சாரம் செலுத்தப்படும் போது வெளிச்சம் கிடைக்கிறது என்பதை அறிந்த எடிசன் ஒளிரக்கூடிய பல்புகளை கண்டுபிடித்தார்.

அதற்கு முன்பே இந்த முயற்சிகளில்  பலர் ஈடுபட்டிருந்தாலும், நீண்டநேரம் எரியக்கூடிய குறைந்த விலையில் தயாரிக்க கூடிய கார்பன் மயமாக்கப்பட்ட மூங்கில் இழைகளைப் பயன்படுத்தி உலகிற்கு ஒளி காட்டினார் எடிசன்.

எடிசனின் ஆசைப்படி ஒளியில் மிதந்த நியூயார்க் 

தான் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும் வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. அந்த ஆசை எளிதில் நிறைவேறும் என்று மற்ற விஞ்ஞானிகள் நம்பவில்லை‌. ஆனால் அவர் ஆசைப்பட்டதைப் போலவே 1882ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி  முதல் முறையாக நியூயார்க் நகரமே மின்சார விளக்குகளால் பிரகாசமாகியது. நியூயார்க் நகரம் தான் உலகிலேயே மின் மயமாக்கப்பட்ட முதல் நகரமானது.

மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய மின்சக்தி சேமிப்புக் கலங்களைக் கண்டுபிடித்த பெருமையும் அவருக்கு உண்டு. இன்றைய உலகம் ஒலி - ஒளி இவற்றில் மூழ்கி இருக்கிறது, இதற்கு வித்திட்டவர் தாமஸ் ஆல்வா எடிசன்‌. கினெட்டாஸ்கோப் கருவி, அதாவது நகரும் திரைப்படத்தை உருவாக்கும் கருவியை முதல் முதலாக கண்டுபிடித்தவர் எடிசன்.

ஒளிக் கொடுத்தவருக்காக இருளில் மூழ்கிய நகரம்

1931 அக்டோபர் 18ஆம் தேதி தன்னுடைய  84 ஆம் வயதில்  நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் எடிசன் காலமானார். அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஹெர்பர்ட் ஹூவர் எடிசனை கௌரவிக்கும் வகையிலும், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் அக்டோபர் 21ஆம் தேதி மாலை அமெரிக்கா முழுவதும் ஒரு நிமிடத்திற்கு மின் விளக்குகளை நிறுத்தும்படி ஆணையிட்டார். அந்த ஒரு நிமிடம் நாட்டில் உள்ளோர் அனைவரும் எடிசனையும் அவரது கண்டுபிடிப்புகளையும் நினைவு கூர்ந்தனர்.

அக்டோபர் 21ஆம் தேதியான இன்று நம் வீட்டின் விளக்குகளை ஒரு  நிமிடம் அணைத்து அறிவியல் அறிஞர், அறிவியல் மேதை, அறிவியல் கண்டுபிடிப்புகளின் தந்தை என எவ்வாறு அழைத்தாலும் அதற்கெல்லாம் தகுதியாக விளங்கும் தாமஸ் ஆல்வா எடிசனை நினைவு நாம் கூறுவோம்..!

- அறிவுமதி அன்பரசன்