திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்தவர்கள் ரத்தினகுமார் - ராணி தம்பதி. இவருக்கு 10 வயதில் கீர்த்தி சபரீஸ்கர் என்ற மகன் உண்டு. தம்பதிகள் சில ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் சென்னையில் கொளத்தூரை அடுத்த விநாயகபுரத்தில் தங்கி வருகின்றனர்.
10 வயது சிறுவன் சபரீஸ்கருக்கு நீச்சல் என்றால் கொள்ளைப் பிரியம். ஏராளமான நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற வேண்டும் என விரும்பியிருந்தான் சிறுவன்.
மகனின் ஆசையை நிறைவேற்ற எண்ணிய ரத்தினகுமார், கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள ப்ளூசீல் உரிமையாளர் காட்வின் என்பவரிடம் மகனை ஒப்படைத்து நீச்சல் கற்றுக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்பேரில் சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதற்கு அபிலாஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த ஒரு வாரமாக அபிலாஷ் ஆலோசனையின் பேரில் சிறுவன் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வந்தான்.
இந்நிலையில் ஆகஸ்ட் 4-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ரத்தினகுமார் - ராணி இருவரும் மகனை காரில் அழைத்துக் கொண்டு நீச்சல் பயிற்சி மையத்தில் விட்டுச் சென்றனர்.
இதையடுத்து அலுவலக நிமித்தமாக ரத்தினகுமார், அவரது காரில் அமர்ந்து கொண்டே, லேப்டாப்பில் வேலை செய்து வந்தார். அதே நேரம் ராணி, மகன் நீச்சல் பயிற்சி செய்வதை நேரில் பார்த்துக் கொண்டிருந்தார்.
அபிலாஷின் ஆலோசனையின் பேரில் நீச்சலடித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென நீரில் தத்தளித்தபடி திணறினான். இதைப் பார்த்து பதறிய ராணி, தன் மகனைக் காப்பாற்றுமாறு பயிற்சியாளரை நோக்கி அலறினார்.
அதற்கு பயிற்சியாளரோ, இப்படி விட்டால்தான் சிறுவன் எளிதில் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும், ஆகவே, இதில் தலையிடாதீர்கள் என கேட்டுக் கொண்டார்.
ஆனால் நீச்சல் குளத்தில் மூழ்கிய சிறுவன் அதிகப்படியாக தண்ணீரைக் குடித்ததால் பேச்சு மூச்சின்றி மிதந்தான். பின்னர், ராணியின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த ரத்தினகுமார், நீரில் மிதந்த மகனை மீட்டார்.
பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது, பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்து போனதாக கூறினர்.
தங்கள் கண் முன் மகன் உயிரிழந்ததைப் பார்த்து கதறித் துடித்த ரத்தினகுமார் - ராணி இருவரும் நீச்சல் பயிற்சியாளரையும், பயிற்சி மைய மேலாளரையும் கடுமையாக திட்டித் தீர்த்தனர்.
சம்பவம் குறித்து கொளத்தூர் காவல்நிலைய போலீசார் சிறுவனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் நீச்சல் பயிற்சி மைய உரிமையாளர் காட்வின் மற்றும் பயிற்சியாளர் அபிலாஷ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பிரிவு 105 -ன் கீழ் கொலை குற்றம் நிகழ்த்துதல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆலோசனையைக் கேட்டு முறைப்படி நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பிய சிறுவன், பயிற்சியாளரின் அலட்சியத்தால் துடிதுடித்து உயிரிழந்த இந்த சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நீச்சல் பயிற்சி மையங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது. முறையான பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா? தகுதியான பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்களா? என அரசு சோதனையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.