இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. அதிலும் இந்த கொரோனா ஊரடங்கில் வீட்டிற்கு வீடு யூடியூப் சேனல்கள் ஆரம்பிக்கப்பட்டு வீட்டின் பாத்ரூமை கூட அதில் வீடியோவாக எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.
அத்துமீறும் யூடியூப் சேனல்கள்:
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில யூடியூப் சேனல்கள் மக்களிடம் நேரடியாக ஒரு விஷயத்தை பற்றின கருத்துகளை கேட்கிறோம் என்ற பெயரில், வீதியில் செல்லும் மக்கள் முன் சென்று மைக்கை நீட்டுவர். ஒரு பொது தளத்தில் பேசுகிறோம் என்ற எண்ணம் சிறு துளியும் இல்லாது, விளையாட்டாக பேசுவதாக எண்ணி, பலவற்றையும் பேசிவிடுவர். அது பின்னாளில் பலராலும் எதிர்க்கப்பட்டு, விமர்சனத்திற்கு உள்ளாவதும் நேரிடும்.
பாலியல் தொடர்பான கேள்விகள்:
அதில் சில சேனல்களை சேர்ந்த இளசுகள், தங்களது பார்வை நேரத்தையும், பின் தொடர்பவர்களையும் அதிகரிக்க, காசு கொடுத்து, அத்துமீறி பாலியல் தொடர்பான கேள்விகளை இளம் பெண்களிடம் கேட்டு, அதற்கு அவர்களை இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என முன்கூட்டியே கூறி விடுவது உண்டு. அப்படி மாட்டிய யூடியூப் சேனல் சென்னை டாக்ஸ். இதில் முன்பு குறிப்பிட்டதை போல, ஒரு இளம் பெண்ணிடம் முன்கூட்டியே பணம் கொடுத்து கூட்டி வந்து, பாலியல் ரீதியான கேள்விகளை கேட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது.
பிராங்க் செய்வது:
அதேபோல பிராங்க் செய்வது, எங்கள் சாதி, மதம் தான் பெரியது எனவும், பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களை தரக்குறைவாக பேசியும் வீடியோ வெளியிடுவது என நாளுக்கு நாள் இந்த யூடியூபில் வரும் வீடியோக்களுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இதற்காக அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இதுபோன்று வீடியோ போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
கோவை 360டிகிரி சேனல்:
அந்த வகையில், சமீபத்தில் கோவையை சேர்ந்த கோவை 360டிகிரி என்ற சேனல், பிராங்க் செய்வதாக கூறி, தனியாக அமர்ந்திருக்கும் பெண்களிடம் சென்று, போனில் பேசுவது போன்றே அப்பெண்களை பற்றி வர்ணணை செய்து, அவர்களை வெளியே கூட்டி செல்வது போன்றே பேசி, அதற்கு அந்த இளம் பெண்களும் செவிசாய்த்து ரெடியாகும் போது, இது ஒரு பிராங்க் எனக் கூறி வீடியோ எடுத்து, அதனை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வந்தனர்.
இதையும் படிக்க: கோட் சூட்டில் லண்டன் பறந்த அமைச்சர்...வேற லெவலில் ட்ரெண்டாகும் போட்டோஸ்...!ஏன் தெரியுமா?
வழக்குப்பதிவு:
இதன் மூலம், பொது இடங்களில் பெண்களை தொந்தரவு படுத்துவது, அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு, அதனை உலகிற்கே காட்டி, அப்பெண்ணின் எதிர்கால வாழ்க்கைக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் விதமாக செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, தொடர் புகார்களின் அடிப்படையில், கோவை 360 டிகிரி யூடியூப் சேனல் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிறப்பு குழு:
சமூக ஊடகங்களை கண்காணிப்பதற்காக 203 காவலர்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமூக ஊடகங்கள் தவறான தகவல்களையும், பொய்யான செய்திகளையும் பரப்பி பொதுமக்களிடையே குழப்பங்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி வருவதாகவும், எனவே அவா்கள் யார் என்பதனை கண்டுபித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துமீறும் சமூக ஊடகங்கள் மீது நடவடிக்கை:
தமிழகம் முழுவதும் சமூக ஊடக குழுக்கள் என்ற தலைப்பில் சிறப்பு குழு, தமிழக காவல்துறை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது எனவும், இணைய வழியில் பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை, பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டறிவதற்காகவும் இந்த குழு பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவைப் பொறுத்தவரை சைபர் பிரிவு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கீழ் இயங்கும் எனவும், குறிப்பாக பொய்யான வதந்திகளை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அந்தப் பதிவினை நீக்குவது மட்டுமல்லாமல் அவர்களின் சமூக ஊடக கணக்குகளை முடக்கவும், கணினி சார் குற்ற வழக்குகள் பதிவு செய்வதற்கும் இந்த குழு செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
சாதி, மத, அரசியல் மோதல்களை முழுமையாக தடுத்திடவும், இந்த குழு செயல்படும் என காவல்துறை தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.