தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை எத்தனையோ பாடகிகள் புகழ் பெற்றிருந்தாலும் அத்தனை பேரிடமும் இருந்து தனித்து, தனித்துவமாய் காணப்பெற்றவர்தான் வாணிஜெயராம்.
அனைத்து மொழிகளிலும்:
80-களின் காலகட்டம் என்பது முற்றிலும் வேறு மாதிரியானது. அந்த காலகட்டத்தை பொக்கிஷம் என கூறும் அளவுக்கு, பல கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். தான் பாடும் பாடலின் வாயிலாக , ரசிகர்களின் காதுகளின் வழியாக மனதிற்குள் இறங்கி சென்று, மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், குழப்பம், புத்துணர்ச்சி, காமம் ஆகியவற்றை துளியும் குறையாமல் கடத்தி தன் குரலால் என்றைக்குமே தமிழ் மக்களை ஆண்டு கொண்டிருக்கும் ஓர் பாடகிதான் வாணி ஜெயராம். ரூபாய் நோட்டில் உள்ள அத்தனை மொழிகளிலுமே இவர் பாடிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கிறுகிறுக்க செய்திருக்கிறது.
சரஸ்வதியின் அருள்:
1945-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியன்று வேலூரில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர்தான் வாணி ஜெயராம். இசைத்துறையை பின்னணியாக கொண்ட இந்த குடும்பத்தில் 9 குழந்தைகளில் 8-வது குழந்தையாக பிறந்த இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் கலைவாணி. கலைமகள் சரஸ்வதியின் அருள் பெற்று விளங்கியதனாலேயே இவருக்கு கலைவாணி என பெயரிடப்பட்டது.
முதல் பாடலிலேயே...:
1971-ம் ஆண்டு இந்தியில் வெளியான குட்டி படத்தில் போலே ரே பப்பி ஹரா என்ற பாடலை பாடி திரையுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம். முதல் பாடலே அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இசையமைப்பாளர்களால் தேடப்படும் பாடகியாக உருவெடுத்தார்.
தேசிய விருதுகள்:
1975-ம் ஆண்டு அபூர்வராகங்கள் படத்தில் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் சங்காபரணம் படத்தின் பாடலுக்கும், ஸ்வாதி கிரணம் ஆகிய படத்தில் இடம் பெற்ற பாடலுக்கும் என மூன்று முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார். இதுதவிர, பிலிம்பேர் விருது, நந்தி விருதுகள், பல்வேறு மாநில விருதுகளை அள்ளிய இவருக்கு நேற்று பத்மபூஷண் விருது என்ற உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது.
ரசிகர்கள்:
கலை, அறிவியல், தோழி ரீதியாக சிறந்த விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் 2023-ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் பாடகி வாணிஜெயராமுக்கும் பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது இந்திய அரசு. பி.சுசீலா, எஸ்.ஜானகி ஆகியோருக்கு 10 வருடங்களுக்கு முன்பே பத்மபூஷண் விருது வழங்கப்பட்டாலும், வாணிஜெயராமுக்கு வழங்கியது தாமதமே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இசைக்காகவே..:
தம் 77 ஆண்டு ஆயுட்காலத்தில் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளை இசைக்காகவே அர்ப்பணித்து விட்ட வாணி ஜெயராம் தமிழ் சினிமா கண்டெடுத்த அதிசய பொக்கிஷம் என்றாலும் பொருத்தமானதாக இருக்கும். இப்பேர்பட்ட திறமைக்கு சொந்தக்காராக இருக்கும் வாணி ஜெயராம் தற்போது பாடல்கள் பாடுவதை தவிர்த்து வந்தாலும், ரசிகர்களால் தவிர்க்க முடியாத அளவுக்கு இதயத்தை ஆக்கிரமித்த ஓர் கலைப்பெட்டகம்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: முடிவுக்கு வந்த பயிற்றுநர்கள் போராட்டம்......