நாடாளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவு குறித்த ஒரு பட்டியல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வேலைகளை தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கடந்த வாரம் பெங்களூருவில் கூடி ஆளுங்கட்சியான பாஜகவிற்கு எதிரான பிரமாண்ட கூட்டணிக்கு INDIA என பெயரிட்டது. மேலும் சில கட்சிகளுடன் கூட்டணிக் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியையே பிரதமர் வேட்பாளராக முன்வைக்கும் நோக்கில் முனைப்புடன் NDA கூட்டணியும் சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது.
இந்நிலையில், இரு தினங்களாக இணையத்தில் பரவலாக தேர்தல் முடிவுகளுக்கான கருத்துக்கணிப்பு என்ற பெயரில் ஒரு பட்டியல் உலாவுகிறது. இவற்றை வெளியிட்டது எந்த நிறுவனம், எந்த ஊடகம் என்று எந்த தகவலும் இல்லை. ஆனாலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என இருதரப்பும் இந்த பட்டியலை வைத்து இணையத்தில் ஒரு விவாதமே நடத்தி வருகின்றனர். மேலும் INDIA கூட்டணி 357 இடங்களை பிடிக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான NDA கூட்டணி 155 இடங்களை பிடிக்கும் என்றும் அந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் எதிர்க்கட்சி கூட்டணி கைப்பற்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எதிர்க்கட்சிகளால் ஆளுங்கட்சிக்கு பயத்தை ஏற்படுத்தப்பட்ட வெளியிடப்பட்டவைகளா? அல்லது தொண்டர்களை உற்சாகப்படுத்த கட்சியினர் யாராவது வெளியிட்டதா? என்பது தெரியவில்லை. ஏனென்றால் கூட்டணியே இன்னும் இறுதியாகாத சூழலில் கட்டாயம் இந்த கருத்துக்கணிப்பு என்பது போலியாக இருக்க வாய்ப்புமுண்டு.