கவர் ஸ்டோரி

2002 குஜராத் கலவரம்.... நிரூபிக்கப்படாத குற்றமும் விடுதலையும்....

Malaimurasu Seithigal TV

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு கலவரத்தின் போது இரண்டு குழந்தைகள் உட்பட 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள் இல்லாததால் விடுவித்துள்ளது. 

கோத்ரா ரயில்:

2002 பிப்ரவரி மாதம் அயோத்தியில் இருந்து இந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கோத்ராவில் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் வகுப்புவாத கலவரம் வெடித்தது.  பிப்ரவரி 27, 2002 அன்று நடந்த இந்த சம்பவத்தில் 59 பேர் இறந்தனர்.

ஆதாரம் இல்லை:

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால்சிங் சோலங்கி கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட 22 பேரையும் நீதிபதி ஹர்ஷ் திரிவேதி அமர்வு விடுதலை செய்துள்ளது எனவும் போதிய ஆதாரம் இல்லாததால் அனைவரையும் நிரபராதிகள் என அமர்வு நீதிமன்றம் அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கு குஜராத்தின் ஹலோல் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு தரப்பால்..:

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஆதாரங்களை அரசுத் தரப்பால் சேகரிக்க முடியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோலங்கி கூறியுள்ளார்.  அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட சாட்சிகளும் அவர்களது கருத்தை மாற்றிக் கொண்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். ஆற்றின் கரையில் இருந்து சில எலும்புகளை போலீசார் மீட்டிருந்த நிலையில் அந்த எலும்புகள் உயிரிழந்தவர்களின் எலும்புகள் என்பதை நிரூபிக்க முடியவில்லை எனவும் சோலங்கி தெரிவித்துள்ளார்.

தாமதமானதால்....:

கொலைகள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 2003 இல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதால், இந்த வழக்கில் காவல்துறையின் பங்கும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் குற்றம் சாட்டியவர்களில்  8 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர்.

-நப்பசலையார்