தமிழ்நாட்டில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு முடிவடைந்த நிலையில், மாணவர்கள் தேர்வு முடிவுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இதையும் படிக்க : பெண்களுக்கு முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கீடு 2-லிருந்து 4 ஆக மாற்றம்...போக்குவரத்துத்துறை அதிரடி!
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.30% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 8,03,385 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அதில் 4,21,013 மாணவிகளும், 3,82,371 மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதேபோல், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகள் 87.78% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 90 பேர் தேர்வு எழுதிய நிலையில், 79 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து, அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களை வெளியிட்ட அமைச்சர், +2 பொதுத்தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளதாகவும்,
திருப்பூர் மாவட்டம் 2 ஆம் இடத்தையும், பெரம்பலூர் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் பாடம் வாரியாக சதம் பெற்ற பட்டியலை வெளியிட்டார். அதில், தமிழில் 2 பேரும், ஆங்கிலத்தில் 15 பேரும், கணிதத்தில் 690 பேரும், அதிகபட்சமாக கணக்குப் பதிவியலில் (Accountancy) 6,573 பேரும், இயற்பியல் - 812 பேரும், வேதியியல் - 3,909 பேரும், உயிரியல் - 1,494 பேரும், தாவரவியல் - 340 பேரும், விலங்கியல் - 154 பேரும் சதம் எடுத்திருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.