மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!

மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!
Published on
Updated on
1 min read

இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கான தேர்தல், வரும் 30ம் தேதி நடைபெறும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்ததையடுத்து போராட்டம் திரும்பப் பெறப்படுவதாக மல்யுத்த வீராங்கனைக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும், கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தி பெண் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் அனுராக் தாகூரை அவரது இல்லத்தில் சந்தித்தனர். 6 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த சாக்ஷி மாலிக், 15 நாட்களுக்குள் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதாக அமைச்சர் உறுதியளித்ததாக குறிப்பிட்டார். தொடர்ந்து ஜூன் 15ம் தேதி வரை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 15 நாட்களுக்குள் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாகூர், வீராங்கனைகளின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் 15ம் தேதி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் கூறினார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெறும் எனவும் பிரிஜ் பூஷனோ அல்லது அவருக்கு தொடர்புடையோரோ மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் உறுதியளித்தார். 

மேலும் மல்யுத்த கூட்டமைப்பின் சார்பாக பெண்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் எனக்கூறிய அவர், மல்யுத்த வீராங்கனைகள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறினார். ஜூன் 15ம் தேதிக்குள் பிரிஜ் பூஷனுக்கு எதிரான விசாரணை முடிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com