பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை பணத்தை திருடிச்சென்ற பெண் மீது வளத்தி காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுக்கா சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.இவர் வளத்தி காவல் நிலையத்தில் கடந்த 18-11-2022 அன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் மணிகண்டன் தெரிவித்திருப்பது, பேஸ் புக் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாகவும், பின்னர் அப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் 28 நாட்கள் மட்டுமே என்னுடன் இருந்தார் என்றும், 14-12-2022 அன்று சொத்து பிரச்சனை காரணமாக எனது வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்றவர் பின்னர் திரும்பவில்லை. தொலை பேசி மூலம் தொடர்பு கொண்ட போது வந்து விடுவதாக கூறிய நிலையில் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துவிட்டார் என புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பெண் எனது வீட்டில் இருந்து சென்றபோது 8 பவுன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்து சென்றுவிட்டதாகவும், பிறகு வேறு ஒரு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும், என்னை ஏமாற்றி திருமணம் செய்து எனது வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துச்சென்ற பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை அடுத்து விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் செஞ்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கவினா தலைமையில் வளத்தி ஆய்வாளர் சுரேஷ்பாபு, உட்பட காவலர்கள் தனிப்படை அமைத்து தேடப்பட்டு வந்த நிலையில் மகாலட்சுமியை சேலம் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் கைது செய்து வளத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கோத்தகிரி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி என தெரியவந்தது. இவர் ஊட்டி, வேலூர், தொட்டபெட்டா,பண்ருட்டி,சிறுதலைப் பூண்டி, சேலம் உட்பட தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
மேல்மலையனூரை அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை 5-வது முறையாக திருமணம் செய்து நகை பணத்தை திருடிச்சென்றுள்ளார். பின்னர் 6-வது திருமணமாக சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை திருமணம் செய்து வசித்து வந்தது விசாரனையில் தெரியவந்தள்ளது. மேலும் மகாலட்சுமியின் மீது வளத்தி காவல் நிலையத்தில் 420, 406,506(1) 417 IPC மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க: பந்தயத்தில் புறா... குவியும் பாராட்டுகள்..!!