தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது திருமாவளவன் பேச்சு.
சென்னையை அடுத்த ஆலந்தூரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ஜமாஅத் தலைவர் பாக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தொல். திருமாவளவன் பேசுகையில்.......
பாஜகவின் சித்து விளையாட்டு:
அனைவரும் ஒன்று சேர வேண்டும். தவறினால் மீண்டும் 2024ல் ஆபத்து ஏற்படும். பா.ஜ.க.வை எதிர்க்கிறார்கள். ஆனால் ஒன்று சேர மறுக்கிறார்கள். ஓரணியில் திரள தயங்கிறார்கள். ஓரணியில் திரள விடாமல் பா.ஜ.க. செய்கிறது. திமுக, திராவிட அரசியலை எதிர்க்க முடியாமல் அதற்கு எதிராக உள்ளவர்களை ஊக்கப்படுத்துவது போல் எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க. அரசியல் சித்து வேலைகளை செய்து வருகிறது.
உடைக்கப்பட்ட அதிமுக:
கூட்டணி சேரும் கட்சிகளை சிதறயடித்து விடுவார்கள். அதிமுக முன்றாக சிதறியதற்கு பா.ஜ.க. தான் காரணம். பா.ஜ.க. தலையிடாமல் இருந்து இருந்தால் சசிகலா தலைமையில் ஒரே அதிமுகவாக இருந்து இருக்கும். பா.ஜ.க. தலையீட்டால் சசிகலா, தினகரன் ஒரங்கட்டப்பட்டு எடப்பாடி, பன்னீர்செல்வம் இணைத்து தற்போது அவர்களையும் உடைத்து விட்டார்கள்.
அரசியல் ஆதாயம்:
தமிழ்நாட்டில் குறி வைத்து செயல்படுவதால் ஜாதியவாதிகள் கொட்டம் அடிக்கிறார்கள். தனியார் இடத்தில் பெரியார் சிலையை அதிகாரிகள் சென்று அகற்ற கூடிய துணிச்சல் எங்கிருந்து வந்தது. அம்பேத்கார், பெரியார், திருவள்ளூவர் சிலைகளுக்கு காவி கட்டுகின்றனர். வேங்கை வயல் குடிநீர் தொட்டில் கழிவு கலக்கப்பட்டு உள்ளது. திருவாரூரில் வி.சி.க. பிரமுகர் கொலை செய்யப்படுகிறார். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் அரசியல் சித்து விளையாட்டு களமாக மாற்றுகின்றனர். அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். எதையும் செய்ய எந்த எல்லைக்கும் போவார்கள் என வி.சி.க தலைவர் கூறியுள்ளார்.