விதிக்கப்படுமா வாரிசு வரி.....

மத்திய பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விதிக்கப்படுமா வாரிசு வரி.....

லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானியை எதிர்த்து மோடி, அமித்ஷா மற்றும் அமலாக்கத்துறை ஏன் வாயை திறக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

கண்டன ஆர்ப்பாட்டம்:

நாடாளுமன்றத்தில் அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்று மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன்..

உபயோகமற்ற பட்ஜெட்:

மத்திய அரசின் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சிக்கும் உதவாத வறுமையையும் ஒழிக்காத பட்ஜெட்.  அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனர்களின் நலன்களை பாதுகாக்கும் பட்ஜெட்டாக உள்ளது.  ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை பாதுகாக்கும் வகையில் பட்ஜெட்டில் அம்சங்கள் இடம்பெறவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சிக்கு வந்ததிலிருந்து...:

தொடர்ந்து பேசிய அவர், பாஜக 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த உடனேயே ஆண்டு திட்ட குழுவை கலைத்தார்கள்.  கிராமப்புற ஏழைகளுக்கும் விவசாய தொழிலாளிகளுக்கு வரப் பிரசாதமாக இருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை 33 சதவீதம் வரை இந்த ஆண்டு பட்ஜெட்டில் குறைத்து இருக்கிறார்கள் என விமர்சித்துள்ளார்.

குறைக்கப்பட்ட நிதி:

விவசாயிகளுக்கான உரமானியம்,கல்வி சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளுக்கே மத்திய அரசு அறிவித்துள்ள பட்ஜெட்டில் நிதியை குறைத்துள்ளனர்.  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிகராக சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பை சரி நிகராக விதித்தால் தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் 60 சதவீதம் இருக்கும் சிறுகுறு தொழில்கள் எப்படி செயல்பட முடியும் என கேள்வி எழுப்பினார்.

அம்பலமான உண்மை:

பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை அளிக்கும் அரசு என்பது அதானி மூலம் அம்பலப்பட்டுள்ளது.  அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டர்பெர்க் வெளியிட்ட அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள 81 கேள்விகளுக்கு அதானி ஒரு கேள்விகளுக்கு கூட பதில் அளிக்க இயலவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

வாரிசு வரி:

லெட்டர் பேட் கம்பெனிகளை வைத்து மோசடி செய்துள்ள அதானிக்கு எதிராக 
மோடி,அமித்ஷா மற்றும் அமலாக்க துறை ஏன் வாயை திறக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜி ராமகிருஷ்ணன் கார்ப்பரேட்டுகளுக்கு செல்வ வரி மற்றும் வாரிசு வரியை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க:    லைக்குக்காக நடுரோட்டில் ஸ்டண்ட்....