2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. அக்கட்சி 17 இடங்களில் மட்டுமே வெற்றி அடைய முடிந்தது. மேலும் 2017 தேர்தலில், காங்கிரஸ் 77 இடங்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருபோதும்...:
வெற்றியைத் தந்த தலைவர்களை காங்கிரஸ் எப்போதும் மதிக்க வேண்டும் எனவும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங்கின் மனைவி பிரதீபா சிங் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டது இமாச்சல பிரதேசத்திற்கு பலனளித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.
அதனால்தான் கட்சியில் உள்ள வயதான, இளம் தலைவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டும் என தான் கூறுவதாகவும் கடந்த தேர்தலில் கணிசமான பங்களிப்பை வழங்கிய தலைவர்களை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வீழ்ந்த காரணம்:
”கடந்த காலங்களில் காங்கிரஸின் வளர்ச்சியில் உதவிய தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே காங்கிரஸ் மேண்டும் உருவாக முடியும். குஜராத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மதிக்கப்படவில்லை. இதனால் தான் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை” என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
மேலும் இது காங்கிரஸ் கற்க வேண்டிய பாடம் எனவும் பொதுவாக, காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர்கள் மற்றும் பார்வையாளர்களை மாநிலத் தலைவர்கள் மீது திணிக்காமல், அவர்களுக்கு அதிகாரம் அளித்து, வளர்த்து, உரிய அங்கீகாரம் அளித்து, அவர்கள் எப்போதும் கட்சிக்காக உழைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
எது பெரிய தவறு:
கடந்த முறை குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தது. கடந்த முறை கட்சியின் வெற்றிக்கு கணிசமான பங்களிப்பை அளித்த தலைவர்கள் நீக்கப்பட்டு பெரிய தவறை செய்தது காங்கிரஸ். அவர்களின் உதவியால் கட்சியை மேம்படுத்த முடியும் ஆனால் அது செய்யப்படவில்லை. அவர்கள் நீக்கப்பட்ட பின் நடைபெற்ற 2022 குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெற்ற 17 இடங்களே அவர்களின் தவறை எடுத்து சொல்ல போதுமானது எனவும் தெரிவித்துள்ளார் வீரப்ப மொய்லி.
-நப்பசலையார்
இதையும் படிக்க: விழுந்து மீண்டெழுந்த காங்கிரஸ்...ஹிமாச்சலில் கடந்து வந்த பாதை...