மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் சரமாரி கேள்வி.

மல்யுத்த வீராங்கனைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? - குஷ்பூவுக்கு மாதர் சங்கம் சரமாரி கேள்வி.
Published on
Updated on
2 min read

பெண்களுக்கு பிரச்சனை என்றால் தேசிய  மகளிர் ஆணையம் கேள்வி கேட்கும் என கூறிய பாஜக நிர்வாகி  குஷ்பூ, மல்யுத்த வீராங்களைகளின் பிரச்னை குறித்து பேச மறுப்பதேன்? என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. 

திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  தன்னை பற்றி பொது மேடையில் அவதூறாக பேசியதாகி கூறி பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருக்கும்  குஷ்பூ தனது அலுவலகத்திலிருந்து செய்தியார்களுக்கு அளித்த  பேட்டியில் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். பெண்களை பற்றி அவதூறாக பேச தந்தைக்கோ கணவருக்கோ உரிமை இல்லாத போது  திமுக நிர்வாகியான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஒரு பொதுக்கூட்டத்தில் எப்படி பேச உரிமை இருக்கிறது ?  என கேள்வி எழுப்பி கடுமையாக சாடினார். 

அதோடு, அந்த செய்தியாளர் சந்திப்பில், திமுகவில் உள்ள  நிர்வாகிகள் பெண்களை இழிவாக பேசி அவற்றை ரசிக்கின்றனர். இதனை தான் கடுமையாக கண்டிப்பதாகவும், 'என்னை சீண்டி பார்க்க வேண்டாம்;  தாங்க மாட்டீர்கள்'  என  முதல்வர் முக ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதோடு, இந்த விஷயத்தில்  தனக்காக மட்டுமே தான்  பேசவில்லை என்றும், எல்லா  பெண்களின் குரலாக தான்  பேசுவதாகவும், எந்த ஒரு பெண்ணும் அவதூறுக்கு ஆளாக கூடாது என தான் நினைப்பதாகவும் கூறியிருந்தார்.   இதையடுத்து, தேசிய  மகளிர் ஆணையத்தின் சார்பாக திமுக நிர்வாகி மீது வழக்கு தொடரப்படும் என அறிவித்திருந்தார்.  அதன் தொடர்ச்சியாக, திமுகவிலிருந்து சிவாஜி  கிருஷ்ணமூர்த்தி  அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும், அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  
 
இவ்வாறிருக்க, அனைத்து பெண்களுக்கும் பிரச்சனை என்றால் தேசிய மகளிர் ஆணையம் கேட்கும் என  குறிப்பிட்டு ஆவேசமாக பேசிய தேசிய மகளிர் ஆணைய நிர்வாகியான குஷ்பூ,  இதற்கு முன்னர் கடந்த இரண்டு  மாதங்களாக,  தங்களுக்கான நீதிக்காக போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகளை  காதுகொடுத்து கூட கேட்காதது ஏன்?  என அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

மற்றும் மல்யுத்த வீரர்கள் பாஜக நிர்வாகியால் பாலியல்  துன்புறுத்தலுக்கு ஆளான போதும், அவர்கள்  போராட்டத்தில் அவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தாலும், அது குறித்து பேச மறுத்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கோள் காட்டி மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தில் தலையிடவில்லை என சமாளிப்பது நியாயமில்லை என குற்றம்சாட்டியுள்ளது. விவசாயிகள் சங்கம் மற்றும் மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கையில் தடுக்காத நீதிமன்றம் எப்படி மகளிர் ஆணையத்தை மட்டும் தடுக்கும் என சாடியுள்ளது. 

அதோடு, கலாக்ஷேத்ரா விவகாரத்தில் கல்லூரி  மாணவிகள் பேராசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட பிரச்சனையில் தேசிய மகளிர் ஆணையா அமைதி காத்தது ஏன்?  என்றும் குறிப்பிட்டு  பெண்களை இழிவுபடுத்தும் அனைவரையும் தேசிய மகளிர்  ஆணையம் கேள்விகேட்கும் என்னும்போது,  பாஜகவை சேர்ந்த பல நிர்வாகிகள் வல்லுறவு மற்றும் வன்புணர்வு வழக்குகளில் குற்றவாளிகளாக உள்ளனர்  என்பதையும் நினைவில் கொள்ளாதது ஏன்? எனவும் சரமாரியாக  சாடியுள்ளது. 

மேலும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராக தாங்கள் பெண்கள் நலன் காக்க எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என பட்டியலிடுங்கள் எனவும் விமர்சித்துள்ளது. மேலும், மேற்கண்ட எந்த ஒரு கேள்விக்குமே தங்களால் பதிலளிக்க முடியாது; ஏனெனில் பாஜக எக்காலத்திலுமே  நியாயத்தின் பக்கம் நிற்காது என விமர்சித்துள்ளது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com