பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!

பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!
Published on
Updated on
1 min read

‘பி.எம்.கேர்ஸ்’ என்னும் பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

உலக நாடுகளையே கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த காலத்தில், கொரோனா நிவாரண பணிகளுக்காக பிரதமரின் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதி ஆரம்பிக்கப்பட்டது. இதில் சாமானிய மக்கள் முதற்கொண்டு, பல முன்னணி தொழிலதிபர்களும், சினிமா நட்சத்திரங்களும் தங்களால் முடிந்த நிதியை அனுப்பி வைத்தனர்.

ஆனால், அந்த நிதி எந்தவகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டது என்ற கேள்வியை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இருப்பினும், பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் பிரதமரின் பி.எம்.கேர்ஸ் நிதி ஒரு சர்ச்சையாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில், தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு பொதுத்துறை நிறுவனங்கள் 2,900 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில் 'பி.எம்.கேர்ஸ்' சர்ச்சை தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பிரதமர் நிதிக்கான மொத்த பங்களிப்பில் 60 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி., என்.டி.பி.சி., ஐ.ஓ.சி., போன்ற நிறுவனங்களிலிருந்து வருவதாகவும், எந்தவிதமான சட்ட அனுமதியும் இன்றி ஒரு அரசு இப்படி மிகப்பெரிய அளவில் நிதி திரட்ட முடியுமா? எனவும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து, சட்ட அனுமதியின்றி பெறப்படும் நிதிக்கு பொறுப்பு, கண்காணிப்பு எங்கே? இந்த நிதிக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதை ஏன் கூறப்படுவதில்லை? என்று கேள்வி எழுப்பியதோடு, இது அரசியல்சாசன கோட்பாடுகளுக்கு முரணானது எனவும், இந்த முழு நிதியும் ரகசியமாக மறைக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும், இந்த நிதி தகவல் அறியும் உரிமைச்சட்ட வரம்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் எனவும், இதன் மீது தலைமை கணக்கு தணிக்கையர் ஆய்வு நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com