ஐ.டி. ரெய்டு என்றால் என்ன? என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் வருமானவரித் துறையினர் நடத்தி வரும் இந்த சோதனையானது அரசியல் நோக்கர்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஐடி என்றால் என்ன? என செய்தியாளர்களை பார்த்து கேட்டுள்ளார்.
முன்னதாக, தஞ்சை கரந்தையில் உள்ள அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன். அதன் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மீன் குஞ்சுகள் தேவைக்கு இன்னமும் ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் உள்ள மீன் குஞ்சு பண்ணைகளை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது 75 சதவீத மீன் குஞ்சுகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அப்போது முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐடி ரைட் நடப்பது குறித்து கேட்ட கேள்விக்கு ஐடி என்றால் என்ன என்று கூறி அவ்விடத்திலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நழுவினார்.