சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த வார்த்தைகள் என்னென்ன? விரிவாக இதோ..!

சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த வார்த்தைகள் என்னென்ன? விரிவாக இதோ..!
Published on
Updated on
1 min read

சட்டப்பேரவையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்த வார்த்தைகள் என்னென்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.

ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்:

நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அரசு உரையில் இருந்த பல்வேறு வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தது அவையில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அதனை முதலமைச்சர் கண்டித்த நிலையில், முதன்முறையாக சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறிய நிகழ்வு அரங்கேறியது.

முன்னதாக 67 அம்சங்கள் கொண்ட 48 பக்க உரையில் தமிழகம் என்ற வார்த்தைக்கு மாறாக தமிழ்நாடு என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. தொடக்கத்தில் ஒரு சில இடங்களில் "தமிழ்நாடு" என குறிப்பிட்ட ஆளுநர், பின்னர் "This Government"  என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பேசினார். 

இதேபோல், 47வது பக்கத்தில் 64வது அம்சமாக குறிப்பிடப்பட்டு இருந்த பத்தியின் இறுதியில் "சட்டம் ஒழுங்கை சிறப்பாக நிலைநாட்டுவதால் தமிழ்நாடு தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது" என்ற அம்சங்களை படிப்பதை தவிர்த்தார். மேலும், 65வது அம்சமாக  சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், மதநல்லிணக்கம் உள்ளிட்ட வார்த்தைகளையும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்டோரின் பெயர்கள் அடங்கிய முழு பத்தியையும் வாசிப்பதை தவிர்த்து 66வது அம்சத்தை வாசிக்க தொடங்கி உரையை முடித்தார்.

குறிப்பாக பெண்ணுரிமை, பல்லுயிர் ஓம்புதல், தமிழ்நாடு அமைதிப்பூங்கா, சுயமரியாதை, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்டவற்றை வாசிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com