தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,...
தமிழ்நாட்டில் கனிம வளக் கொள்ளை மற்றும் மது விற்பனை மூலம் மட்டுமே வருவாய் பெருக்குகிறோம்; திட்டங்களை செயல்படுத்துகிறோம் என தமிழக அரசு முழக்கமிடுவது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், இதனைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் எனவும், கனிமவள கொள்ளையால் ஒட்டுமொத்த தமிழகம் பேராபத்தை சந்திக்கப் போகிறது என்றும் எடுத்துரைத்தார். அதோடு, மது விற்பனையால் மக்கள் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பதை முதலமைச்சர் உணர வேண்டும் எனவும், இதன் மூலம் தமிழ்நாட்டின் மனித வளம் எந்த வகையிலும் முன்னேறாது என்றும் கூறினார்.
அதையடுத்து, 2000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம் என்றும், ஆனாலும், இதன் மூலம் கருப்பு பணப் பதுக்கல்காரர்களுக்கு மறைமுக துணை போவதாக இது அமைந்து விடக்கூடாது என்றும்,உரிய கால அவகாசம் கொடுத்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும் அழிக்க வல்லது, மற்றும், நீர்நிலைகள் நீர்வழிப்பாதைகள் ஏரி குளம் குட்டைகள் உள்ளிட்டவற்றை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் அடிப்படை நோக்கம் கொண்டதாகும் என்று கூறினார்.
இதனால், தமிழ்நாடு பேரழிவை சந்திக்கும் எனக்கூறிய அவர், இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தி வரும் மே 22-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக முதலமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்ப உள்ளனர் என்றும், இதனை ஏற்று தமிழக முதலமைச்சர் அச்சட்டத்தைத் திரும்பப் பெற முன்வர வேண்டும் எனவும் கோரினார்.
மேலும், இதனை மறுக்கும் பட்சத்தில் சட்டமன்றத்தில் விவாதம் இன்றி மறைமுகமாக குரல் வாக்கெடுப்பு எடுத்து, விவசாயிகள் தமிழக மக்கள் கருத்தறியாமல் சட்டமன்ற ஜனநாயகத்திற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இச்சட்டத்திற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க } " பணமதிப்பிழப்பு; மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்.." - சீமான்.
மேலும், காவிரி, தென்பெண்ணை ஆறுகளை கர்நாடகம் கழிவுநீர் கால்வாயாக மாற்றிவருகிறது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்கள் பேரழிவை சந்திக்கப் போகிறார்கள். தமிழக அரசு மறைமுகமாக கர்நாடகாவிற்கு துணை போகிறதோ? என்று அஞ்சதோன்றுகிறது.வாய்திறக்க தமிழக அரசு மறுப்பதால் தமிழகம் பேரழிவை சந்திக்கும் அபாயகரமான சூழல் ஏற்பட்டிருக்கிறது எனவும், இதனால், உடனடியாக தமிழ்நாடு முதலமைச்சர் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட மாநிலங்களோடு அவசரகால கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இதையும் படிக்க } உக்ரைனுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, ஜெலென்ஸ்கி அழைப்பு....!