மதுபான கடைகள் மற்றும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருப்பதன் காரணமாக சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருப்பதாகவும் ஆட்சியாளர்கள் இரும்பு கரத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.
காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா தனது பிறந்த நாளை முன்னிட்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக மாநில பொருளாளர் பிரேமலதா,
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்ட நிலைமையில் இருந்து வருவதாகவும் அதற்கு மதுபான கடைகள் மற்றும் போதை பொருட்களின் விற்பனை அதிகரிப்பே காரணம் எனவும் இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் முதற்கொண்டு அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
இந்திய நாடு ஒரு கலாச்சாரமான நாடு எனவும் தற்போது சூழ்நிலையில் அவை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் ஆட்சியாளர்கள் இரும்பு கரத்தை கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என கூறினார்.
அரசியல் விமர்சகமாக உதயநிதி ஸ்டாலின் செங்கல் திருடன் என விமர்சித்தது போல எடப்பாடி கே பழனிச்சாமி மீது திருட்டு விமர்சனம் வைக்கப்பட்டு வருவதாகவும் இதுபோன்ற விமர்சனங்கள் அவர்களது தரத்தை தாழ்த்திக் கொள்வதாகவும் வழக்குத் தொடுப்பதற்கு முகாந்திரம் இருக்க வேண்டும் எனவும் முகாந்தாரம் இன்றி வழக்குத் தொடுப்பதற்கான காரணம் அரசியல் காழ்ப்புணர்ச்சி தான் எனவும் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் அடுத்த முதலமைச்சர் என அமைச்சர்கள் தெரிவித்து வரும் கருத்துக்கு அக்கட்சியினர் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆக்கப்பட்டு இருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டி மக்கள்தான் முடிவெடுக்க வேண்டுமென பேசினார்.
இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் தேமுதிகவிற்கு குறைந்திருப்பதாக தெரிவிக்கும் கருத்து முதலாவது தவறு எனவும் வாக்காளர்களுக்கு பணத்தை வழங்கி வெற்றி பெற்றது ஒரு வெற்றியா என கேள்வி எழுப்பினார். மேலும் தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் எனவும் இந்த வெற்றியின் மூலம் வாக்கு சதவீதத்தை நிர்ணயிக்க முடியாது எனவும் கலைஞர் ஜெயலலிதா ஆகியோர்களும் தேர்தலில் வெற்றி தோல்வியை சந்தித்தவர்கள் தான் என்று அடுத்த தேர்தலில் தேமுதிக தங்களது முழு வாக்கு பலத்தை வெளிப்படுத்தும் எனவும் கூறினார்.
தமிழகத்தில் திமுக அதிமுக கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி என கருத்து தெரிவிப்பது அரசியலில் ஒன்றும் இல்லை எனவும் மேலே இருப்பவர்கள் கீழே வருவதும் கீழே இருப்பவர்கள் மேலே போவதும் நடக்கக்கூடியது எனவும் தேமுதிகவின் விஸ்வரூப வெற்றியை விரைவில் காண்பிக்கப் போவதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க: இன்னும் 20 ஆண்டுகள் திமுக தான் தமிழகத்தை ஆள வேண்டும்....!!