நாடு முழுவதும் வரும் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் புதுச்சேரியில் அணில் வாகன விநாயகர், மயில் வாகன விநாயகர் என பல வடிவங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வரும் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள், மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதற்கான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியை ஓட்டியுள்ள தமிழக பகுதியான பட்டானூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 33 ஆண்டுகளாக இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் புதுச்சேரி மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடக உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு 5 அடி முதல் 50 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. எந்த ஒரு ராசாயனமும் இல்லாமல் மரவல்லி கிழக்கு மாவு, பேப்பர் மாவுகளைக்கொண்டு தயாரிக்கப்படும் இந்த விநாயகர் சிலைகளால் சுற்றுச்சுழலுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்கின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
சித்திபுத்தி விநாயகர், நரசிம்ம வாகன விநாயகர், அணில் விநாயகர், அன்னபக்ஷீ விநாயகர், மயில் வாகன விநாயகர் என 20க்கும் மேற்பட்ட வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயார் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 2000 சிலைகள் ஆர்டர் கிடைந்துள்ளதாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.