மேகதாட்டுவில் அணைக்கட்டும் திட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில துணை முதல்வரும், நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான டி.கே.சிவகுமார் பொறுப்பேற்ற நீர்பாசனத்துறை தொடர்பான முதல் கலந்தாய்வுக் கூட்டத்திலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்டும் பணியை விரைவுப் படுத்தப் போவதாக அறிவித்தார். இதனை கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், பசவராஜ் பொம்மை கடந்த ஆண்டு கர்நாடக சட்டமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தபோது, மேகேதாட்டு அணை கட்டுவதற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டியுள்ள அவர், கர்நாடக மாநில துணை முதல்வரான டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் கட்சி எதிர்கட்சி வரிசையில் இருந்தபோது, மேகேதாட்டு அணை கட்ட வலியுறுத்தி பெங்களூருவிலிருந்து 10.01.2022 இல் நடைபயணம் தொடங்கி, 10 நாட்கள் பல ஊர்கள் வழியாகச் சென்று 19.01.2022 அன்று மேகேதாட்டுவில் ஆர்ப்பாட்டம் நடத்தியதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
தற்போது மீண்டும் காங்கிரஸ் அரசு பொறுப்புக்கு வந்தவுடன், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார், மேகேதாட்டு அணை கட்டும் பணியை தொடங்குவோம். எந்த நிலையிலும் பின்வாங்க மாட்டோம் என்று கூறியிருப்பதை கண்டனத்துள்ள அவர் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு சொட்டு நீர்கூட காவிரியில் வராது என எச்சரித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16, 2018 இல் அளித்தத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய 177.25 டி.எம்.சி. நீர், கானல் நீராகவே போய்விடும் எனக்கூறியுள்ள வைகோ, ஒன்றிய பா.ஜ.க. அரசு மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!