”இனி கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே நாளில் முடிவு” - பொன்முடி அறிவிப்பு!

”இனி கல்லூரிகளிலும் ஒரே பாடத்திட்டம், ஒரே நாளில் முடிவு” - பொன்முடி அறிவிப்பு!

அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில், அனைத்து பல்கலைகழக துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுடன் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து பல்கலைக் கழகங்களிலும் ஒரே பாடத் திட்டம் பின்பற்றப்படும் என்றார். இருமொழி கொள்கையின் படி தற்போதைய பாடத் திட்டம் தொடரும் என்று கூறியவர், மாநில கல்விக்கொள்கை விரைவில் அறிவிக்கப்பட்டு, அதன்படி கல்வி பயிற்றுவிக்கப்படும் என்று கூறினார். மேலும் வரும் காலங்களில் தேர்வு முடிவுகள் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : ”வெளிநாட்டு பயண முதலீடுகளை அறிய ஆவலாக உள்ளோம்” அண்ணாமலை பேட்டி!

மேலும் கடந்த ஆண்டில், 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் 6 ஆயிரத்து 986 பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கை உயர்வதுடன், அதன் தரமும் உயர வேண்டும் என்றார்.  அத்துடன் ஆளுநர் ரவி  தமிழ்நாடு அரசுக்கு  எதிராக பல்வேறு  விஷயங்களில் ஈடுபட்டு வருவதாக பொன்முடி குற்றச்சாட்டினார்.