60 உறுப்பினர்களை கொண்ட திரிபுரா சட்டசபைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 31 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல்:
திரிபுரா சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 60 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு 31 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்காக 31,000 வாக்குச்சாவடி பணியாளர்கள் 3,327 வாக்குச்சாவடிகளில் பணியாற்றி வருகின்றனர்.
தலைமை தேர்தல் அதிகாரி:
திரிபுராவின் தலைமை தேர்தல் அதிகாரி கீதே கிரண்குமார் தினகர்ராவ் கூறுகையில், மாநிலத்தில் 28,13,478 வாக்காளர்கள் உள்ளனர் எனவும் தேர்தல் முடிவுகள் மார்ச் 2ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் படைகள்:
நியாயமான மற்றும் அமைதியான தேர்தலுக்காக 30,000 பாதுகாப்பு வீரர்கள் மாநிலத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். CAPFகள் தவிர, அசாம் ரைபிள்ஸ், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் திரிபுரா காவல்துறையைச் சேர்ந்த பணியாளர்களும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிகபட்ச வேட்பாளர்கள்:
ஆளும் பாஜக தேர்தலில் அதிகபட்ச வேட்பாளர்களை (55) நிறுத்தியுள்ள அதே நேரத்தில் அதன் கூட்டணி கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணிக்கு (ஐபிஎஃப்டி) ஐந்து இடங்களை பாஜக வழங்கியுள்ளது. IPFT கட்சியானது ஆறு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியில் இடது முன்னணி சார்பில் 47 வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் 13 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவை தவிர, திப்ரா மோதா கட்சி 42 வேட்பாளர்களையும், திரிணாமுல் காங்கிரஸ் 28 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன. 58 சுயேச்சைகளும், பல்வேறு சிறிய கட்சிகளைச் சேர்ந்த 14 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
-நப்பசலையார்