கர்நாடக மாநிலத்தில் முழு கடை அடைப்பு நடைபெறுவதால் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் உள்ள கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக நாட்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக கொள்ளேகால், சாம்ராஜ் நகர், மைசூர் உள்ளிட்ட கர்நாடகாவுக்கு செல்ல வேண்டிய தமிழக பேருந்துகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து செல்ல வேண்டிய தமிழக பதிவு எண்கள் கொண்ட அரசு பேருந்துகளும் இவை தவிர ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து சத்தியமங்கலம் வழியாக மைசூர் செல்ல வேண்டிய பேருந்துகளும் வராததால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு போலீசார் திம்பம் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்ளை பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பண்ணாரி சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி, ஆசனூர் தாளவாடி உள்ளிட்ட பகுதிகளிலும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.