பாஜக கூட்டணியைவிட்டு வெளியே வந்ததால் குறிப்பிட்ட சதவீதம் சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டின் பேரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பொழுது பேசிய அவர், "திமுகவை வளர்க்க காங்கிரஸ் பாடுபடுகிறது என்று அண்ணாமலை கூறுவது அர்த்தமற்ற குற்றச்சாட்டு. தோழமை கட்சியையே விரட்டி விட்ட மாமேதை அண்ணாமலை" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "ஜெய் ஸ்ரீ ராம் கோசத்தை இந்தியா பாகிஸ்தான் விளையாட்டு போட்டியின் போது எழுப்பியது கண்டனத்துக்குரியது, 120 கோடி மக்களின் பிரதிநிதிகள் உள்ள நாடாளுமன்றத்திலும் இதேபோல் ஜெய் ஸ்ரீ ராம் கோசத்தை எழுதுகின்றனர். இது போல பொது இடங்களில் மத பிளவை ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்புவது கண்டிக்கத்தக்கது" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், "தமிழகத்தில் மட்டுமல்லாமல் தேசிய அளவில் அந்தந்த தொகுதிகளில் எந்த ஜாதி அதிகம் உள்ளனரோ அவர்களுக்கு தான் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. ஜாதி அரசியலில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் இட ஒதுக்கீட்டையும் கொடுக்க முடியாது. இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்றால் ஜாதி இருக்க வேண்டும். இதனால்தான் ஜாதி வாரிய கணக்கெடுப்பு வேண்டும் என்று காங்கிரஸ் கூறுகிறது. இதை நிறைவேற்றினால் தான் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடை அமல்படுத்த முடியும் என்பது நிதர்சனம்" என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.