”தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது” - முதலமைச்சர்

Published on

அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருக்கிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாடு தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாவட்ட நிர்வாகம், சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். 

மாநாட்டில் பேசிய முதலமைச்சர், அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்றார். காவல்துறை அதிகாரிகள், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமென்றும் ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை கூறினார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில், 110 விதியின் கீழ் அறிவிக்கபட்ட திட்டங்கள், நிதிநிலை அறிக்கை, வேளாண் அறிக்கை, மானிய கோரிக்கையின் போது அறிவிக்கபட்ட திட்டங்கள் ஆகியவற்றின் நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அதே போல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் செயல்பாடுகள், உலக முதலீட்டாளர் மாநாடு, பண்டிகை கால பாதுகாப்பு, முதலமைச்சர் காலை உணவு திட்டம், நாடாளுமன்றத் தேர்தலின் போது சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசித்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com