திருப்பத்தூர் அருகே பெண்ணை காப்பாற்ற சென்ற இளைஞருக்கு கத்தி குத்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்க வழக்கங்கள் அதிகமாக காணப்படுகிறது. அவ்வப்போது இந்த பழக்கவழக்கத்தால் சில உயிரிழப்புகளும் நிஅழ்ந்து வருகின்றன. அந்த வகையில், தற்போது திருப்பத்தூரிலும், அதித கஞ்சா போதையால் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் பகுதியை சேர்ந்தவர்கள் கிரண் குமார், துர்கேஸ்வரி தம்பதி. துர்கேஸ்வரின் தங்கை வெளியூரில் இருப்பதால் அவர்களுடைய மகள்கள் இருவரும் துர்கேஸ்வரியின் அரவணைப்பில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் கஞ்சா போதையில் தங்கை மகள்களிடம் அவ்வப்போது தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் துர்கேஸ்வரிக்கும், சண்முகத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று வழக்கம்போல் துர்க்கேஸ்வரி வீட்டின் முன்பு அளவுக்கு அதிகமான கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில் அமர்ந்திருந்த சண்முகம், மீண்டும் துர்கேஸ்வரியின் தங்கை மகள்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை துர்கேஸ்வரி தட்டி கேட்ட நிலையில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்க முயன்றள்ளார். அப்போது துர்க்கேஸ்வரியின் தங்கை மகள்களின் நண்பர் வல்லரசு என்பவர் தடுக்க முயன்ற போது, சண்முகம் அவரை சரமாரியாக கத்தியால் குத்தியதில் வல்லரசு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் துர்கேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வல்லரசுயின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வல்லரசை கொலை செய்த சண்முகத்தை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தனது வீட்டிற்கு முன்பு கஞ்சா அடிக்க கூடாது என கூறியதன் காரணமாக தன்னை கொலை செய்த வந்த இடத்தில் தனது மகள்களின் அப்பாவி நண்பரை குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.