மதுவிற்பனையில் ஈடுபட்ட கடையை சூறையாடிய பெண்கள்...!!

மதுவிற்பனையில் ஈடுபட்ட கடையை சூறையாடிய பெண்கள்...!!
Published on
Updated on
1 min read

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கடையை பெண்கள் சூறையாடினர்.  பாப்பாரப்பட்டி அருகே சந்துகடையை கிராம மக்கள் சூறையாடியதால் வீதியில் அரசு மதுபானம் ஆறாக ஓடியது.

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள  மலை கிராமம் பூதிநத்தம்.  மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும்.  இதனை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி ,கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியா பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.  இதனால் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மதுஅருந்தி மதுபோதைக்கு அடிமையாகி உள்ளனர்.

இதனால் இவர்களின் உடல் நலம் பாதிப்படைந்து வருவதோடு மட்டுமல்லாமல்,  போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன.  இதனை எதிர்த்து கிராமத்திற்க்குள் மது விற்க அனுமதிக்க  கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.  ஆனால் காவல்துறைக்கும்  வருவாய்துறைக்கும் மது விற்போர் மாதந்தோறும் மாமூல் தருவதால் எந்த அதிகாரியும் இதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.  இதனால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராமமக்கள்  ஒன்று திரண்டு சட்ட விரோதமாக சந்துகடை வைத்து மதுவிற்கும் ஜெயராமன் வீட்டை முற்றுகையிட்டு, சூறையாடினர். 

வீட்டில் பதுக்கி வைத்திருந்த அரசு மதுபானங்களை வீதியில் கொட்டி உடைத்தனர்.  மதுபானம் ஆறு போல் வீதியில் வழிந்தோடியது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சந்து கடைகளை முழுமையாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இச்சம்பவம்  அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com