வங்கியை ஏமாற்றி ஒரு கோடியை சுருட்டிய பெண்... வங்கியில் மாட்டியது எப்படி?!!

வங்கியை ஏமாற்றி ஒரு கோடியை சுருட்டிய பெண்... வங்கியில் மாட்டியது எப்படி?!!
Published on
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கியை ஏமாற்றிய இளம் பெண் தொழிலதிபர் ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்துள்ளார். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் வில்லேஜ் பஜார் என்ற பல்பொருள் அங்காடி ஒன்று செயல்பட்டு வருகிறது.  அங்காடியை விஜயகுமார் மற்றும் அவரது மனைவி பிரியங்கா ஆகிய இருவரும் இணைந்து நிர்வகித்து வந்த நிலையில் அங்கு ஏ.டி.எம். எந்திரம் ஒன்று வைக்க வேண்டும் என விரும்பியுள்ளனர். 

அதன்படி ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீஸ் என்ற நிறுவனத்திடம்  விண்ணப்பித்ததையடுத்து அங்கு கடந்த 2020-ம் ஆண்டு புதிய ஏ.டி.எம். இயந்திரம் வைக்கப்பட்டது.  இந்நிலையில் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் கையிருப்பு பராமரிக்கும் முழு பொறுப்பும் ஒப்பந்ததாரரும், உரிமையாளருமான பிரியங்கா என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அதாவது ஒப்பந்ததாரரான பிரியங்கா, ஏ.டி.எம்.மில் எவ்வளவு பணம் தேவையோ அந்த பணத்தை ஹிட்டாச்சி நிறுவனத்திடம் தெரியப்படுத்த வேண்டும்.  இதையடுத்து இந்த தகவல் மும்பை  அலுவலகத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு அங்கிருந்து சங்கராபுரம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு பெருமளவு தொகை வந்து சேரும்.  ஆரம்ப காலத்தில் சகஜமாக பணத்தை நிர்வகித்துக் கொண்டிருந்த பிரியங்காவுக்கு திடீரென மனம் மாறியுள்ளது.

2020-ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் ஏ.டி.எம். எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு, வங்கியில் இருந்து வரும் ரகசிய குறியீட்டு எண் பிரியங்காவுக்கு திடீரென இரண்டு முறை வந்துள்ளது.  இந்த பாஸ்வேர்டை பார்த்து பேராசை கொண்ட பிரியங்கா அதனை பயன்படுத்த முயன்றுள்ளார். 

தவறுதலாக வந்த எண்ணை காண்பித்து ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு சென்ற பிரியங்கா கோடிக்கணக்கில் பணம் வாங்கி அதனை அவரது தனிப்பட்ட வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துள்ளார்.  இந்த பணத்தில் கார், நகை என சொகுசாக வாழ்ந்து வந்த பிரியங்கா மீது வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

மேலும் ஹிட்டாச்சி நிறுவனத்தின் துணைத்தலைவர் ஜேம்ஸ் பிலிப் என்பவர் சங்கராபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பிரியங்காவுக்கு வலை விரிக்கப்பட்டது.  போலி ரகசிய குறியீட்டை வைத்து ஒரு கோடியே 15 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வரையிலும் பணமோசடி செய்த பிரியங்கா அவரது கணவர் விஜயகுமார், இந்த குற்றத்துக்கு உறுதுணையாக இருந்த சிவக்குமார், தன்ராஜ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் போலீசார். 

ஏ.டி.எம்.மை உடைத்துக் கொள்ளையடிப்பவர்களை விட மும்மடங்கு அதிக பணத்தை உடைக்காமலேயே அள்ளியிருக்கிறார் பிரியங்கா. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com