
கள்ளக்குறிச்சி மாவட்டம் கிராமத்தில் 8 வருடமாக விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சேஷசமுத்திரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்று தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. ஆனால் அதே நாளில் இருவேறு சமூகதினரிடையே வாக்குவாதம் எழுந்ததைத் தொடர்ந்து, பெரும் கலவரமாக உருவெடுத்தது. இந்த கலவரத்தில் 15-க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், சேஷசமுத்திரம் கிராமத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொதுவாக ஒரு கிராமத்தில் கலவரத்தை அடக்குவதற்காக 144 தடை உத்தரவு போடப்பட்டால் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு அது விலக்கப்படும். ஆனால் இந்த கிராமத்திலோ 8 வருடங்களுக்கு மேலாக 144 தடை உத்தரவு அமலில் இருந்துள்ளது. இதுவரை எத்தனையோ அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் இந்த தடை உத்தரவை நீக்குவதற்கு முயற்சி மேற்கொண்டனர். ஆனால் இருதரப்பினரிடையே இருந்த கடுமையான போட்டி ஆண்டுகள் கடந்தும் தொடர்ந்து வந்துள்ளது. இதனால் ஊருக்குள் தேர்த்திருவிழா, கோயில் திருவிழா என்பது மட்டுமல்லாமல் அரசு நடத்தப்படும் கிராம சபைக்கூட்டங்கள் கூட நடத்தப்படாமல் கிராமமே வெறிச்சோடி காணப்பட்டது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்வர்ணகுமார் இரு தரப்பு மக்களையும் அழைத்து சமாதானம் பேசுவதற்கு முடிவெடுத்தார். அதன்படி 8 வருடங்களுக்கு முன்பு அடித்துக் கொண்ட இருவேறு சமூகத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசியதில் அவர்களுக்குள் சுமூக உறவு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து எந்த நாளில் 144 தடை உத்தரவு போடப்பட்டதோ, அதே ஆகஸ்ட் 15-ம் தேதியன்று, தடையை விலக்கி, கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. 8 வருடங்களுக்கு பிறகு நடந்த இந்த கிராம சபைக்கூட்டத்தில் பங்கேற்ற கலெக்டர் ஸ்வர்ணகுமார், சாதி மதம் இனம் எதுவும் பாராமல் மக்கள் அனைவரும் சமம் என்பதை எண்ணி ஒற்றுமையாக வாழ வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள், இத்தணை ஆண்டு கால பிரச்சினைக்கு ஒரே நாளில் தீர்வு காணச் செய்த மாவட்ட கலெக்டருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். மேலும் ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினம் மட்டுமல்ல, 8 வருடங்களாக பூட்டிக் கிடந்த கிராமத்துக்கும் விடுதலை கிடைத்த இந்த நாளே, எங்களுக்கான சுதந்திர நாள் என கருதுகின்றனர் அந்த பகுதி மக்கள்.