சீனாவுடனான இரு நாடுகளின் தொடர்பு....திறந்த கதவு போல....ராகுலுடனான கமலின் முழு உரையாடல் !!!

காங்கிரஸின் இந்திய ஒற்றுமை பயணம் டெல்லி வந்தபோது, ராகுல் காந்தியுடன் கமல்ஹாசனும் உடனிருந்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த உரையாடல் வீடியோ வைரலாகி வருகிறது.
ராகுல்-கமல் உரையாடல்:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், நடிகரான கமல்ஹாசனுக்கும் இடையே அரசியல் நெருக்கம் அதிகரித்து வருகிறது. இரு தலைவர்களும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சமீபத்திய சந்திப்பில் சீனா, விவசாயம், தமிழர் பெருமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ராகுல், கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினர். அப்போது அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்தனர்.
A conversation between two proud Indians. All other identities blur when it comes to the Nation . @rahulgandhi
— Kamal Haasan (@ikamalhaasan) January 2, 2023
Have a great united Indian new year. https://t.co/TyGHi6ZVPh
எம்மாதிரியான உரையாடல்:
21 ஆம் நூற்றாண்டில் உலகளாவிய கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் இங்குதான் அரசாங்கம் தவறி அதன் கணிப்பை தவறாகப் புரிந்துகொண்டது எனவும் அவர்களின் உரையாடலில் பேசியுள்ளனர். அதாவது உக்ரைனுக்கு ரஷியா எந்த மாதிரியான அணுகுமுறையை கடைப்பிடிக்கிறதோ, அதே மாதிரியான அணுகுமுறையையே இந்தியாவிடம் சீனா கடைப்பிடிக்கிறது என்று ராகுல் கமல்ஹாசனிடம் கூறிடுள்ளார்.
உண்மையை மறைக்கும் அரசாங்கம்:
தொடர்ந்து கமல்ஹாசனுடன் பேசிய ராகுல் காந்தி, ”எல்லையில் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். நமது நிலப்பரப்பில் சுமார் 2,000 கி.மீட்டரை சீனா ஏற்கனவே கைப்பற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை. இது குறித்து அரசு தெளிவாக எதுவும் கூறவில்லை. சீனா ராணுவம் நமது நாட்டில் கூடாரமிட்டுள்ளனர் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் யாரும் நுழையவில்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.
கதவுகள் திறந்திருக்க வேண்டும்?:
மேலும், ”சீனா அதன் நடவடிக்கை மூலம் மிகத் தெளிவான செய்தியை அளிக்கிறது. மேலும் அது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இந்தியா அதற்கு எவ்வித நடவடிக்கையையும் எடுக்காது என்பதே உண்மை. எதிர்க்கட்சிகளுக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்தே இருக்க வேண்டும்” என்றும் ராகுல் அவர்களின் உரையாடலின் நடுவே பேசியுள்ளார்.
இருட்டில் விசில்:
ராகுலிடம் கமல்ஹாசன் பேசும் போது, “பிரதமரின் செயல்பாடானது இருட்டில் விசில் அடிப்பது போல் உள்ளது” என கூறியுள்ளார். அப்போது பேசிய ராகுல், ”நீங்கள் நாட்டின் தலைவர் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் ராணுவம் எங்கள் எல்லைக்குள் நுழைந்துவிட்டதாக தெரிகிறது. ஆனால் நீங்கள் அதை மறுக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் உங்கள் நாட்டைப் பற்றி மற்ற நாடுகள் என்ன நினைப்பார்கள்? இது முதல் பிரச்சினை.” எனத் தெரிவித்துள்ளார்.
எப்போதும் தயாராக:
மேலும், “இரண்டாவதாக, இதற்கு முன்பு நீங்கள் எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தீர்கள். ஆனால் தற்போது எல்லா இடங்களிலும் சண்டையிட்டு கொண்டிருக்கிறீர்கள். இது போரைப் பற்றியது அல்ல எனினும் உங்கள் நாட்டை யாரும் தாக்க முடியாத சூழ்நிலை உங்கள் நாட்டில் இருக்க வேண்டும்.” என சீனா தாக்குதல் குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.
என்ன தொடர்பு?:
தொடர்ந்து பேசிய ராகுல் ”பலவீனமான பொருளாதாரம் உள்ள ஒரு தேசத்திற்குள்ளும், நமது எல்லைக்குள்ளும் சீனா ஊடுருவுவதற்கு ஒரு தொடர்பு உள்ளது. ஏனென்றால் அந்த நாடு உள் நாட்டு குழப்பங்களுடன் போராடுகிறது என்பதை சீனா தெளிவாக அறிந்திருக்கிறது. எனவே சீனாஎன்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்” என எச்சரிக்கை விடுக்கும் விதமாக ராகுல் கூறியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: புத்தாண்டில் நிறுத்தப்பட்ட விமான சேவை....காரணம் என்ன?!!