கோயில் சுவர் விழுந்து பெண்ணின் கை முறிவு!

கோயில் சுவர் விழுந்து பெண்ணின் கை முறிவு!
Published on
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் அருகே பழமையான கோயில் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவரின் கை முறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் ஊராட்சி குடிசேத்தி கிராமத்தில் வேதாரண்யம் வேதாராண்யேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சுமார் நூறு ஆண்டு பழைமையான பிரசித்திபெற்ற விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. 

இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த வேதாராண்யேஸ்வரர் கோயிலுக்கு இந்த குன்னலூர் கிராமத்தில் சுமார் 2000ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கோவில் பணியாளர்கள் 10பேர் பணியாற்றி குத்தகை தொகைகள் வசூல் செய்து வருகின்றனர். 

ஆனால் இந்த விநாயகர் கோவிலுக்கு எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் கோவில் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில், எந்தநேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவில் சுவர்களில் மரம் வளர்ந்து காட்சியளிக்கிறது. எனவே சிதிலமடைந்து கிடக்கும் கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வழிபாடு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது கிராம மக்களே சொந்த செலவில் கோவிலை சீர் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்களும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு கோயில் நிர்வாகம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் அப்பகுதி பக்தர்கள் சனி பிரதோஷ வழிபாடு நடத்தியுள்ளனர். அப்போது குடிசேத்தி கிராமத்தை சேர்ந்த சண்முகானந்தத்தின் மனைவி சரளா(50) என்ற பெண் கோவில் கருவறை வாசலில் விளக்கேற்றி வழிபட்டு கொண்டிருந்தபோது, திடீரென்று சுவரின் ஒரு பாகம் இடிந்து சரளா தலையில் விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கையில் முறிவும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, காயமடைந்த சரளா, அப்பகுதியினரால் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் இச்சம்பவம் அறிந்த சுற்று பகுதி கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் சுவர் இடிந்து விழுந்து பெண் காயம் அடைந்த சம்பவம் கிராமத்திற்கு ஏற்பட்ட அபசகுனம் என்று கூறிவருகின்றனர். இதனால் கிராம மக்கள் மத்தியில், பீதி ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com